சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதை துரைமுருகன் எதிர்ப்பேன் என்றாரா ?

பரவிய செய்தி
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் வேலூரில் திமுக மிகப்பெரிய போராட்டம் நடத்தும்- திமுக பொருளாளர் துரைமுருகன்
மதிப்பீடு
விளக்கம்
சென்னையின் தண்ணீர் பிரச்சனையானது எச்சரிக்கை மணியை அடித்து உள்ளது. பல பகுதிகளில் மக்கள் தண்ணீர் இல்லாமல் துயரத்தில் உள்ளனர். சென்னையின் தண்ணீர் பிரச்சனையை சரி செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேலூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை ரயில்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டது. ஆனால், வேலூரின் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல திமுக பொருளாளர் ஆன துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக அனைத்து ஊடக செய்திகளிலும் வெளியாகின.
தமிழ்நாட்டில் இருந்தே சென்னையின் தண்ணீர் பிரச்சனையை சரி செய்ய மேற்கொள்ளும் முயற்சிக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது தவறான செயல் என சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. ஊடகச் செய்தியிலும் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர துரைமுருகன் எதிர்ப்பு என்றே வெளியாகி உள்ளது.
துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான செய்திக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
துரைமுருகன் மறுப்பு :
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், ” காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரை உள்ள பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. அந்த நீரை மறித்து சென்னைக்கு கொண்டு போனால் வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றே பேசினேன். எனது கருத்தை திரித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்களுக்கு துரைமுருகன் கூறியது என்ன ?
வேலூரில் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது,
நிரூபர் : ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீரை எடுத்து செல்வதாக கூறியுள்ளனர் ?
துரைமுருகன் : அது இந்த தண்ணீர் அல்ல.. வேற தண்ணீர்.. நிலத்தடி நீர்.
நிரூபர் : இல்லை சார். ஜோலார்பேட்டையில் ஆய்வுகள் நடந்து வருகிறது . காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீரை 10 மில்லியன் லிட்டர் அளவிற்கு சென்னைக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்ல ஆய்வுகள் நடக்கிறது.
துரைமுருகன் : அப்படி.. இந்த தண்ணீரை எடுத்துச் செல்ல இருந்தால் மாவட்டம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.
முடிவு :
வேலூரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நீரை மறித்து சென்னைக்கு கொண்டு சென்றால் மாவட்டம் தழுவிய போராட்டம் நடைபெறும் என தெரிவித்து உள்ளார். ஏனெனில், அங்குள்ள மக்கள் அத்திட்டம் மூலமே பயனடைந்து வருகிறார்கள். அந்த நீரை எடுத்துச் செல்லவே துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதனை செய்திகளில் சரியாக வெளியிடாமல் தவறாக திரித்து உள்ளதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை போன்ற பெரு நகரத்தில் வாழும் மக்கள் நீரின்றி தவிக்கும் நேரத்தில் பிற ஊர்களில் இருந்து தண்ணீரை எடுத்து வருவது சரியான முடிவு. ஆனால், அங்குள்ள மக்களின் தண்ணீர் பிரச்சனையை கருத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். பெரு நகரம் என்பதால் சிறு ஊர்களில் வாழும் மக்களின் தண்ணீரை கொண்டு வருவது சரியான காரியமாக இருக்காது.
கடந்த 50 ஆண்டுகாலமாக இரு கட்சியை சேர்ந்தவர்களே இம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். ஆகையால், மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு இவ்விரு கட்சியினரே பொறுப்பாகிறார்கள். இங்கு நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை, நீர் வழித்தடங்கள் முறையாக இல்லை. தண்ணீரின் அவசியங்கள், பிரச்சனை எழும் பொழுது மட்டுமே அறிகின்றனர். தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி நீர்நிலைகளை பேணிப் பாதுகாத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
” இல்லையேல், தண்ணீரை வானத்தில் இருந்து பெறாமல், நிலத்துக்கு அடியில் இருந்து மட்டுமே பெற முடியும் என்ற நிலை உருவாகும். இது எதிர்காலத்தில் அனைவருக்கும் பேராபத்தெ ! “
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.