கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா பகுதியின் புகைப்படங்களா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
குஜராத் : கிருஷ்ணா பகவான் அரசாண்ட துவாரகா. இன்று கடல் கொண்டு விட்ட பகுதியாக உள்ளது. கடல் கொண்ட, அந்த இடத்தில் கடலுக்கு உள்ளே உள்ள அரண்மனை. எவ்வளவு கம்பீரம். அதுவும் அந்த சிங்கம். எவ்வளவு அற்புதம். ஜெய் ஸ்ரீ ராம் .
மதிப்பீடு
விளக்கம்
இந்து மத புராணக்கதைகளில் வரும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகை பகுதி கடலுக்குள் மூழ்கியதாக கதைகளில் கூறப்படுவதுண்டு. அப்படி கடலுக்குள் மூழ்கிய துவாரகை பகுதியின் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளின் புகைப்படங்கள் என சில புகைப்படங்களின் தொகுப்பு பகிரப்பட்டு வருகிறது.
தமிழில் செப்டம்பர் 27-ம் தேதி Renganayagalu என்ற முகநூல் கணக்கில் துவாரகை பகுதியின் புகைப்படங்கள் என பதிவாகி உள்ளது. இதற்கு முன்பாக, இதே புகைப்படங்கள் இந்திய அளவிலும் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும், புகைப்படங்களை இணைத்து யூட்யூப் தளத்தில் வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே, இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
ஒவ்வொரு புகைப்படத்தையும் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் முறையில் ஆராய்ந்து பார்த்த பொழுது புகைப்படங்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன.
புகைப்படம் 1 :
கடற்கரையோரமாக காட்சியளிக்கும் கட்டிடங்கள் இருக்கும் புகைப்படம் ஆனது துவாரகதீஸ் கோவிலின் புகைப்படமாகும். tripadvisor என்ற இணையதளத்தில் அந்த கோவிலின் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.
புகைப்படம் 2 :
கடற்கரையில் கோவில் கோபுரம் சாய்ந்து இருக்கும் புகைப்படம் குறித்து தேடிய பொழுது , ” 2016 ஏப்ரல் 16-ம் தேதி பால கோபாலன் என்பவர் flickr தளத்தில் இதே புகைப்படத்தின் மற்றொரு கோணத்தை பதிவிட்டு உள்ளார்.
அதில், 2005-ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரழிவையும், தமிழ்நாட்டின் தரங்கபாடி பகுதியில் உள்ள இடம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழகத்தில் எடுக்கப்பட்ட கோவில் கோபுரம் என்பதை இதிலிருந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
புகைப்படம் 3 :
கடலுக்கு அடியில் இருக்கும் தூண்களை கொண்ட அரண்மனை, சிங்கம் போன்ற புகைப்படங்கள் குறித்து தேடிய பொழுது, ” Neptune Memorial Reef ” என்ற கடலுக்கு அடியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் குறித்த தகவல் கிடைத்தது. அட்லாண்டிக் பகுதியின் மாதிரியாக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள மியாமி பகுதியில் கடலுக்கு அடியில் ஆழத்தில் இதனை அமைத்து உள்ளனர்.
தூண்களை கொண்ட இரு புகைப்படங்கள் மற்றும் சிங்கத்தின் புகைப்படங்கள் என மூன்று புகைப்படங்கள் இதில் இடம்பெற்று இருக்கிறது. 2008-ல் Neptune Memorial Reef என்ற தலைப்பில் ஆழ்கடலில் நீந்துபவர்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோவில் புகைப்படத்தில் இருக்கும் காட்சிகளை காணுங்கள்.
புகைப்படம் 4 :
அரண்மனை சுவர் போன்று இருக்கும் மற்றொரு புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், Fubiz என்ற இணையதளத்தில் ” Lost City found Underwater in China ” இதே புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. எனினும், இந்த புகைப்படம் உண்மையா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இந்த புகைப்படம் அங்கிருந்து எடுக்கப்பட்டவை என அறிந்து கொள்ள முடிகிறது.
புகைப்படம் 5 :
இறுதியாக, படிக்கற்கள் உடன் அமைந்து இருக்கும் புகைப்படம் குறித்து தேடினோம். அந்த புகைப்படமானது பல ஆண்டுகளாக , மறைந்து போன அட்லாண்டிஸ், குமரி கண்டம் , பெரு என பல கதைகளுடன் இணையத்தில் பரவி வருகிறது. அதே புகைப்படத்தை இங்கேயும் பயன்படுத்தி உள்ளனர். எனினும், அந்த புகைப்படத்தின் தொடக்கம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, பல ஆண்டுகளாக இணையத்தில் இருக்கும் புகைப்படங்களை இணைத்து கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகை பகுதி என தவறான செய்தியை இந்திய அளவில் பரப்பி உள்ளனர். மதத்தின் மீது நம்பிக்கைக்கு கொண்ட மக்களும் தவறான புகைப்படங்களை உண்மை என நினைக்க வாய்ப்புகள் உள்ளதால் உண்மையான தகவலை முடிந்தவரை பகிரச் செய்யவும்.