This article is from Nov 07, 2019

கிழக்கிந்திய கம்பெனி ராமர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதா ? | உண்மை என்ன ?

பரவிய செய்தி

1818-ல் வெளியிடப்பட்ட 2 அணா நாணயத்தின் முகப்பு. ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் பின்புறம்.

Dinamani archived link 

மதிப்பீடு

விளக்கம்

ந்திய நிலப்பரப்பு பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பொழுது நிர்வாகம் தொடர்பாக கிழக்கிந்திய கம்பெனியால் வெளியிடப்பட்ட நாணயங்களில் இந்து கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்ததாக வெளியாகும் புகைப்படங்களை அனைவரும் கண்டு இருப்பீர்கள். அவ்வப்போது, அந்த நாணயங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.

இந்நிலையில், தினமணி நாளிதழின் செய்தி இணையதளத்தில் நவம்பர் 5-ம் தேதி வெளியான சிறு தகவலில் ” பிரிட்டிஷ்காரர்கள் வெளியிட்ட நாணயத்தில் அன்றைய ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப் படமோ அல்லது பரங்கிச் சின்னமோ அல்லது விக்டோரியா ராணியின் முகமோ பதிக்கப்படாமல்.. முகப்பில் ஸ்ரீராம பட்டாபிஷேகக் காட்சியும், பின்புறம் தாமரை மலரும் இடம்பெற்று இருக்கிறது ”  எனக் குறிப்பிட்டு நாணயத்தின் இரு பக்கங்களையும் காண்பித்து இருந்தனர்.

உண்மை என்ன ? 

கிழக்கிந்த கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் முதலில் மசூலிப்பட்டினம், மெட்ராஸ், சூரத், கொல்கத்தா போன்ற பகுதிகளில் தனி நிர்வாகத்தின் படி நாணயங்களை வெளியிட்டு இருந்தனர். உதாரணமாக, ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரிட்டிஷ் காலத்திய நாணயங்கள் குறித்த தகவலில் அதனை காணலாம். மெட்ராஸ் ஆளுகையில் இரண்டு வராகன் நாணயம் புழக்கத்தில் இருந்துள்ளது.

அடுத்ததாக, 1835-ம் ஆண்டில் அனைத்து பகுதியிலும் பொதுவான நாணயத்தை கொண்டு வர சட்டம் இயற்றப்பட்டு புதிய நாணயங்கள் நடைமுறைக்கு வந்தது. 1818-ல் நேரடியாக இங்கிலாந்து அரசு நாணயங்களை வெளியிடவில்லை. 1835-க்கு பிறகே பொது நாணயம் வெளியாகியது.

RBI Coinage link

பொதுவான நாணயம் தொடர்பான சட்டம் வந்த பிறகு மன்னர் நான்காம் வில்லியம் உடைய உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள், விக்டோரியா ராணி உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன. இதன்பின்னர், இங்கிலாந்தின் நேரடி நாணயங்களே வெளியிடப்பட்டு வந்துள்ளன.

இப்படி இருக்கையில், 1818-ல் இங்கிலாந்து(UK) பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் என வெளியாகும் புகைப்படங்கள் தவறானவை என அறிந்து கொள்ள முடிகிறது.

போலி நாணயங்கள் : 

கிழக்கிந்திய கம்பெனி, இங்கிலாந்து ராஜ்ஜியத்தின் பெயரில் இந்திய கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியாகியதாக பரவும் நாணயங்கள் போலியானவையே.

2009-ம் ஆண்டில் ” kulraj the numismatist ” என்ற வலைப்பதிவில் வெளியான நாணயவியல் குறித்த தகவலில் கிழக்கிந்திய கம்பெனி பெயரில் கடவுள்களின் பெயரில் வெளியான போலியான நாணயங்கள் பலவற்றை  வெளியிட்டு இருந்தனர்.

மேலும், coinquest என்ற இணையதளத்தில் 1616 முதல் 1839 வரையில் கிழக்கிந்திய கம்பெனி பெயரில் வெளியாகும் போலியான நாணயங்களை குறித்து இந்தியாவின் நாணயவியலாளர் சுமித் போலாவின் கருத்து பதிவாகி இருக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி ராமர், அனுமன் உள்ளிட்ட கடவுள்களின் உருவம் மற்றும் மதம் சார்ந்த குறியீடுகள் பொறித்த நாணயங்களை வெளியிட்டதாக கூறுவது தவறான தகவல். அப்படிக் கூறிக் கொண்டு பகிரப்படும் நாணயங்கள் அனைத்தையும் Temple Tokens என நாணயவியல் சார்ந்தவர்கள் அழைப்பர். இவை சமீபத்தில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுபவை. மேலும், இவை அதிகாரப்பூர்வமானவையோ அல்லது அரிதாவையோ அல்ல.

Temple Tokens நாணயங்கள் சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்யவும், உண்மையான நாணயங்கள் கூறி மக்களிடம் விற்பனை செய்யவும் தயாரிக்கின்றனர். அவற்றில், ANNA என்பதற்கு பதிலாக AANA , UK என்ற வார்த்தை, அன்றைய அரசின் முத்திரை இல்லாமல் இருப்பது போன்ற பல பிழைகளை காணலாம்.

ஸ்ரீராமர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் snapdeal, ebay உள்ளிட்ட ஆன்லைன் வணிக தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க : கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட 2 அனா நாணயமா ?

தினமணி செய்தி இணையதளத்தில் வெளியிட்ட ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் பொறிக்கப்பட்ட நாணயமும் அவ்வாறான நாணயங்களில் ஒன்று தான். கடந்த ஆண்டிலேயே கிழக்கிந்திய கம்பெனி பெயரில் பரவும் போலி நாணயங்களை குறித்து யூடர்ன் ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்கள்! கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்டவையா ?

முடிவு : 

நம்முடைய ஆய்வில் இருந்து, 1818-ல் கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயத்தில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் உருவம் பொறிக்கப்பட்டு இருந்ததாக தினமணி இணையதளத்தில் வெளியான தகவல் தவறானது. அவை டெம்பிள் டோக்கன்ஸ் என அழைக்கப்படும் போலியான நாணயங்கள்.

UPDATE : 

கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயங்களில் கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டதாக வைரலாகும் நாணயங்கள் குறித்து விரிவாக வெளியிட்டோம். மீண்டும் கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயத்தில் ஐயப்பன் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

Patrikai archived link 

நவம்பர் 7-ம் தேதி பத்திரிகை என்ற இணையதளத்தில் ” 400 ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் உருவத்துடன் ஆங்கிலேயர் வெளியிட்ட நாணயம் ” எனக் செய்தி வெளியிட்டு இருந்தனர். 1616-ல் வெளியான நாணயத்தில் ஐயப்பன் உருவம் இருப்பதாக காண்பிக்கப்பட்ட நாணயமும் ” Temple Tokens ” என அழைக்கப்படும் போலியான நாணயங்களே.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader