மீன் உணவுடன் தயிர் சாப்பிட்டால் உடலில் வெண்புள்ளிகள் ஏற்படுமா ?

பரவிய செய்தி
தெரிந்து கொள்வோம் ! மீன் சாப்பிடும் போது கண்டிப்பாக தயிர் சேர்த்து சாப்பிடக் கூடாது. ” Leucoderma ” என்னும் வெண்புள்ளிகள் தோன்ற இதுவே ஒரு முக்கிய காரணமாகும் . தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் வெண்புள்ளிகள் நிரந்தரமாக மறையும். முடிந்தவரை இதை உங்களின் நண்பர்களுக்கு பகிருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
அசைவ உணவான மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது என்ற தகவலை பெரும்பாலானோர் அறிந்து இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், மீன் சாப்பிட்ட உடன் பால் பொருளான தயிர் சாப்பிடும் பொழுது உடலில் வெண்புள்ளிகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் மத்தியில் நம்பப்பட்டு வருகிறது.
வாய்வழி தகவல்களாக மட்டுமல்லாமல் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்வோம் என பலரும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மீனுடன் தயிர் சாப்பிடக் கூடாது எனக் கூறுவது போன்று, மீன் உணவு சாப்பிட பிறகு பால் குடிக்கக் கூடாது, அப்படிக் குடித்தால் உடலில் வெண்புள்ளிகள் உருவாகும் என்ற தகவல்கள இணையத்தில் பரவி கிடக்கின்றன.
மீன் உணவுடன் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை எடுத்துக் கொண்டால் உடலில் வெண்புள்ளிகள் ஏற்படுமா, வேறு எந்தமாதிரியான உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் என அறிந்து கொள்ள நாம் தீர்மானித்தோம். அதை விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
உண்மை என்ன ?
NDTV-ல் வெளியான கட்டுரையில் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் பிஎன். சின்ஹா கூறுகையில், ” அசைவ உணவான மீனும், சைவப் பொருளாக விலங்கில் இருந்து வரும் பாலும் ஒன்றாக எடுத்துக்கொள்வது ஒவ்வாத ஒன்றாகும். இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களின் உடலில் தமஸ் குணா (தீங்கு விளைவிக்கும் ஆற்றல்) அதிகரிக்கும் மற்றும் சமநிலையில் பாதிப்பு உண்டாகும். இது நமது உடலில் வேதி மாற்றத்தை உருவாகிறது மற்றும் லியூகோடெர்மா எனும் தோல் நிறத்துக்கு காரணமாக இருக்கலாம் என தாம் நம்புவதாக ” கூறி இருந்தார்.
ஆனால், மருத்துவர் பிரவீன் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடுவதால் உடலில் வெண்புள்ளிகள் ஏற்படும் என்பது தவறான கருத்து. அதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை. தோலில் இருக்கும் மெலானின் குறைபாட்டின் காரணமாக வெண்புள்ளிகள் ஏற்படுகின்றன ” என்ற தகவலை தெரிவித்து இருந்தார்.
மீன் மற்றும் பால் பொருட்கள் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்தவை. உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருக்கும் பொழுது இரண்டையும் சாப்பிட்டால் வலி, வயிறு சரியின்மை, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. மேலும், இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் பொழுது வெண்புள்ளிகள் உருவாவதாக இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என கூறுகின்றனர்.
வெண்புள்ளிகள் ஏற்பட காரணம் ?
நமது தோல்களுக்கு நிறத்தைக் கொடுக்கூடியது ” மெலானின் ” எனும் நிறமி. இந்த மெலானின் நிறமியின் சுரப்பு குறிப்பிட்ட இடங்களில் குறைந்து போகும் போது அப்பகுதியில் வெண்புள்ளிகள் (Vitiligo or Leucoderma) ஏற்படத் துவங்குகின்றன. இந்த நிறமி குறைபாடு குழந்தைகள் முதல் முதியவர் வரை எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இந்த நிறமியே சூரியனில் இருந்து வெளியாகும் புறஊத கதிர்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கின்றது. வெண்புள்ளிகள் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தினாலும், தைராய்டு உள்ளிட்ட பிற நோய்கள் உண்டாகும் போதும் ஏற்படக்கூடும்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, மீன் உணவு சாப்பிட்ட பிறகு பால் அல்லது தயிர் சாப்பிட்டால் உடலில் வெண்புள்ளிகள் உண்டாகும் என்பதை மருத்துவர்கள் மறுத்துள்ளனர். கட்டுக்கதையாக வெளியான தகவல் உலகம் முழுவதிலும் நம்பப்பட்டு வருகிறது.
மீன் உடன் பால் பொருட்கள் சாப்பிடுவதால் வெண்புள்ளிகள் உண்டாகும் என்பதற்கு மருத்துவர் ரீதியாக ஆதாரங்கள் இல்லை. எனினும், ஒவ்வாமை இருப்பவர்கள் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.