மின்கம்பியில் கிளையை அகற்றிய ஊழியரின் வீடியோ நிவர் புயலின் போது எடுத்ததா ?

பரவிய செய்தி

TNEB ஊழியருக்கு பாராட்டுக்கள், பாதுகாப்பில்லை என்றாலும் கடமையினை செய்த வீரர்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

நிவர் புயல் பாதிப்பின் போது மின்கம்பத்தில் சிக்கிய மரக்கிளையை மின்சார ஊழியர் ஒருவர் உயிரை பணயம் வைத்து ஆபத்தான நிலையில் அகற்றிய வீடியோ காட்சி என இவ்வீடியோ சமூக வலைதளங்களில், ஊடகச் செய்திகளில் வெளியாகி வைரலாகின. இந்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதாகவும், தமிழக மின்துறை ஊழியருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தும் ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

ஆனால், முன்னணி ஊடகங்களில் புதுச்சேரியில் உயிரைப் பணயம் வைத்து மின் கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய மின்சார ஊழியர் என செய்தி வெளியாகின. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் ஊழியருக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Twitter archive link 

பாலிமர் செய்தியில், இந்த வீடியோ புதுச்சேரி மின்துறை சார்பில் வெளியிட்டதாக, அதற்கு முதல்வர் நாராயணசாமி பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர். ஆனால், இந்த வீடியோ புதுச்சேரிலோ அல்லது நிவர் புயலின் போதோ எடுக்கப்பட்டது அல்ல.

உண்மை என்ன ?

ஆபத்தான நிலையில் மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றும் ஊழியரின் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜூன் 4-ம் தேதி அதே பாலிமர் செய்தி தெலங்கானாவில் நிகழ்ந்ததாக செய்தி வெளியிட்டு உள்ளனர்.

” தெலங்கானாவின் நிசாம்பூர் பகுதியில் மின்வயர்களுக்கு இடையே மரக்கிளை விழுந்ததால் அப்பகுதியில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதனையறிந்த மின் நிறுவனத்தின் ஊழியரான நூர் என்பவர் பல அடி உயரத்தில் இருந்த மின்கம்பிகளைப் பிடித்து அந்தரத்தில் தொங்கியப்படி தவழ்ந்து சென்றார். எந்த பாதுகாப்பு உபகரணமும் இன்றி மரக்கிளையை அகற்றிய அவர், பின் அதேபோல் தவழ்ந்தப்படியே உயிரைப் பணயம் வைத்து தரை இறங்கினார். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து நூரைப் பாராட்டும் பலரும், அடிப்படை வசதிகளைச் செய்து தராத மின் நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர் ” என செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2020 ஜூன் 1-ம் தேதியே இவ்வீடியோ ETV Telangana எனும் தெலுங்கு செய்தியில் வெளியாகி இருக்கிறது. மேலும், ஆபத்தான நிலையில் மின் கம்பியில் மரக்கிளையை அகற்றிய நூரின் புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டு இருக்கிறார்கள். தெலுங்கு செய்திகள் மட்டுமின்றி டெய்லிமெயில் உள்ளிட்ட ஆங்கில செய்திகளிலும் தெலங்கானா மின்சார ஊழியரின் வீடியோ குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது.

தொடக்கத்தில் இருந்து இறுதி வரும் காட்சிகள் இரண்டு வீடியோக்களும் ஒன்றே என நமக்கு தெரியப்படுத்துகின்றன. வீடியோவின் தொடக்கத்தில் 10வது நொடியில் வரும் பறவை மற்றும் வீடியோவில் இறுதியில் மின் கம்பத்தில் இருந்து இறங்கும் போது அருகே இருக்கும் மரம் ஆகியவை ஒன்றாக இருக்கின்றன.

புயல், மழை போன்ற சூழல்களில் மின்சார ஊழியர்கள், மீட்புக் குழுவினர் என பலத்துறையை சேர்ந்தவர்களும் களத்தில் இறங்கி தங்களின் பணியை செய்யும் போது பாராட்டுகளைப் பெறுகின்றனர். ஆனால், சில நேரங்களில் பழைய மற்றும் தவறான வீடியோகளும் சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவி விடுகிறது.

மேலும் படிக்க : சிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பெய்ததா ?

இதற்கு முன்பாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் மண்படத்தில் இருக்கும் நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்ததாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவை தமிழக முன்னணி ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால், அனைத்து இடங்களிலும் மழை பெய்யும் வீடியோ ஆதாரத்துடன் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், நிவர் புயலின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மின்கம்பத்தில் இருந்த மரக்கிளையை ஆபத்தான நிலையில் அகற்றிய மின்சார ஊழியர் என சமூக வலைதளங்களில், ஊடகச் செய்தியில் வெளியான வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தெலங்கானா மாநிலத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button