பாஜக கேசவ விநாயகம் காரில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதா?

பரவிய செய்தி

ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம் என்று சொன்ன ஆட்டுக்குட்டியே இப்ப முகமூடி கிழிந்து விட்டது. 

X link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காகத் தேர்தல் பறக்கும் படை பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகிறது. 

Facebook link

இந்நிலையில், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் காரில் இருந்து 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில், “அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்ற காரில் 500 ரூபாய் நோட்டுக்களாக 2 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்” என்றுள்ளது. இதனை அதிமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 

உண்மை என்ன ?

பரவக்கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டில் ’29.03.2024’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தேதியில் ஜூனியர் விகடன் இப்படி நியூஸ் கார்டினை வெளியிட்டதா என அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டும் ஜூனியர் விகடன் பதிவிடவில்லை. 

மேலும், கேசவ விநாயகம் வாகனத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வேறு ஊடகங்களில் ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளதா என்பதையும் தேடினோம். அப்படி எந்தவொரு செய்திகளும் வெளியாகவில்லை. 

ஜூனியர் விகடன்  தனது எக்ஸ் பக்கத்தில் ’29.03.2024’ அன்று நியூஸ் கார்ட் ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில், ”அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் சென்ற காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்தல் பறக்கும் படை செய்யும் வழக்கமான சோதனையாகும்.

இதிலிருந்து பாஜக கேசவ விநாயகம் காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு  போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

அதேசமயம் திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருக்கும் போது பாஜக கொடி கட்டிய வாகனம் ஒன்று பிடிபட்டுள்ளது. அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் ரூ.75,000 பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த மொய் கவரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்துக் கடந்த மாதம் 26ம் தேதி ’ஜெ நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில்,  பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் சென்ற காரில் ரூபாய் 2 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியதாகப் பரவும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.  

Please complete the required fields.
Back to top button
loader