எம்ஜிஆருக்கு மீண்டும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாரா ?

பரவிய செய்தி
எம்ஜிஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று தன் பேச்சை தொடங்கினார் எடப்பாடி. ஏற்கனவே அவருக்கு கொடுத்தாச்சே…
மதிப்பீடு
விளக்கம்
அதிமுகவின் பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என தன் பேச்சை தொடங்கியுள்ளார். ஆனால், 1988ம் ஆண்டே எம்ஜிஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
எம் ஜி ஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று தன் பேச்சை தொடங்கினார் எடப்பாடி.
ஏற்கனவே அவருக்கு கொடுத்தாச்சே 🤣🤣🤣— கோட்டை அப்பாஸ் (@kottai_abbas) July 11, 2022
உண்மை என்ன ?
சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக கட்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ” இரண்டாவது தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம். நீண்டகாலமாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். தந்தை ஈ.வெ.ரா.பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துகின்றோம்.
ஆகவே, இந்த இயக்கம் உருவாக அடிப்படைக் காரண கர்த்தாவாக இருந்தவர்கள் இந்த தலைவர்கள். எனவே இந்த தலைவர்களுக்கு புகழ் சேர்கின்ற விதமாக, மரியாதை கிடைக்கின்ற விதமாக, நாட்டு மக்களுக்கு செய்த சேவையை பாராட்டுகின்ற விதமாக மத்திய அரசு இவர்களுக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என இரண்டாவது தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கின்றோம் ” என்றே பேசியுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், அதிமுக பொதுக்குழுவில் எம்ஜிஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி தன் பேச்சை தொடங்கியதாகப் பரவும் செய்தி தவறானது. அவர் பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கே பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி பேசியுள்ளார் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.