எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை நோய் உறுதி எனப் பரவும் போலி செய்தி!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக புதிய தலைமுறை செய்தி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு, ” குரங்கு அம்மை நோயால் அவதியுறும் எடப்பாடியை நலம் விசாரிக்காமல் கொரோனா என்று நாடகமாடும் பன்னீர்செல்வத்தை நலம்பெற வாழ்த்துவது ஒருதலைபட்சமான அரசியல் ” என முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்ததாகவும் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக செய்திகளில் தகவல் வெளியானது. இதையடுத்து, தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்து இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை பாதிப்பு எனப் பரப்பப்படும் நியூஸ் கார்டு பற்றி புதிய தலைமுறை சமூக ஊடகப் பக்கங்களில் ஆராய்கையில், அப்படி எந்த பதிவும் இல்லை. இந்த நியூஸ் கார்டு புதியதலைமுறையின் பழைய நியூஸ் கார்டு வடிவில் உள்ளது.
இதுகுறித்து, புதியதலைமுறையின் இணையதள பிரிவைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ” இது போலியானது. நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.
அடுத்ததாக, ஜூனியர் விகடன் செய்தி பற்றி தேடுகையில, “எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை ” என எந்த செய்தியையும் வெளியிடவில்லை. மாறாக, செல்லூர் ராஜு பற்றி தேடியப் போது, ” ஓபிஎஸ், தன் செயலுக்கு இபிஎஸ்-ஸைச் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்..!” – செல்லூர் ராஜு ” என்ற செய்தியே வெளியாகி இருக்கிறது. அதில், போலியான செய்தியை எடிட் செய்து உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனையில் உறுதி எனப் பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.