கொடநாடு கொலை வழக்கை நிறுத்தினால் நீட் மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக பழனிசாமி கூறினாரா ?

பரவிய செய்தி
கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயார் – சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
மதிப்பீடு
விளக்கம்
செப்டம்பர் 13-ம் தேதி நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கிடையில், திமுகவின் நீட் விலக்கு மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்றால் கொடநாடு கொலை வழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக புதியதலைமுறை மற்றும் சன் நியூஸ் உடைய நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
கொடநாடு வழக்கு மறுவிசாரணையை நிறுத்தினால் மட்டுமே நீட் விலக்கு மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறவில்லை. வைரல் செய்யப்படும் இரு நியூஸ் கார்டுகளுமே எடிட் செய்யப்பட்டது.
செப்டம்பர் 13-ம் தேதி புதியதலைமுறை செய்தியில், ” நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை அதிமுக ஆதரிக்கும் – சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி ” என்ற நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.
சன் நியூஸ் தமிழ் செய்தியில், ” நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுக வெளிநடப்பு ! ” என்றே நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.
சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்து இருப்பதாகவும், பாஜக வெளிநடப்பு செய்ததாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயார் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரப்பப்படும் புதியதலைமுறை மற்றும் சன் நியூஸ் சேனல்களின் நியூஸ் கார்டுகள் போலியானவை என அறிய முடிகிறது.