எகிப்து பிரமிடுக்கு கீழ் இந்துக் கோவிலைக் கண்டுபிடித்ததாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
எகிப்து பிரமிடுகள் கீழ் இந்து கோவில்கள் சிவலிங்கங்கள்! இந்துவும் பிறந்தது புண்ணியம்!
மதிப்பீடு
விளக்கம்
எகிப்து நாட்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது கிசா பிரமிடுக்கு அடியில் பழங்கால இந்துக் கோவில் மற்றும் சிவலிங்கங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி பிரமிட்டின் அருகே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் அதில் இந்துக்கோயில்களின் மேல் பிரமிடுகள் கட்டப்பட்டிருப்பதாகவும், பல கோயில்கள் மற்றும் சிவலிங்கங்கள் பிரமிடுகளின் கீழ் மூடப்பட்டிருப்பதாகவும் கூறியதோடு இதை நம்பாதவர்கள் தேசத்துரோகிகள் என்றும் பரப்பப்பட்டு வருகிறது.
An ancient Hindu temple was found under the pyramids of Egypt during excavations. It can be seen that there is a Hindu Sun Temple under the pyramid. And pyramids are built over temples.
Under the pyramid there are many doors of Hindu temples and also there are many shiv lingams. pic.twitter.com/gHpqmOZ3cR
— Yashika Chaudhary (@Yashi_Sunshine) April 2, 2023
உண்மை என்ன ?
எகிப்து பிரமிடுகளுக்கு கீழ் உள்ள இந்துகோவில் என இணையத்தில் பரப்பப்பட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இது பிரமிடுகளுக்கு கீழ் உள்ள இந்துக்கோவில் அல்ல. இது மதகுருவின் கல்லறை ஓவியம் என தெரிய வந்தது.
பொதுவாக இறந்தவர்களின் உடல்களை குடுவையில் அடைத்து அவர்களது உடலை வாசனை திரவியத்தால் பதப்படுத்தி பிரமிடுகளில் புதைக்கும் பழக்கம் எகிப்தியர்களுக்கு உண்டு. இதனை உறுதிபடுத்தும் விதமாக இந்துக்கோவில் என தவறுதலாக பரவி வரும் இந்தப் புகைப்படம் தொடர்பான தகவல்கள் ஜூலை 16, 2014 ஆம் தேதி NBC செய்தியில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் எகிப்து பிரமிடில் இருந்து 1,000 அடி (300 மீட்டர்) தொலைவில் உள்ள ஒரு எகிப்திய மதகுருவின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியம் பண்டைய வாழ்க்கையின் காட்சிகளை சித்தரிக்கிறது என்றும், மதகுரு ஒருவரின் கல்லறையில் 4,300 ஆண்டுகள் பழமையான சுவர் ஓவியத்தை கண்டுபிடித்தது ஆச்சரியமூட்டுவதாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதில் தெரிவித்துள்ளனர்.
மேலும், நைல் நதியில் படகுகள் தெற்கே பயணிப்பது, சதுப்பு நிலத்தில் பறவைகளை வேட்டையாடும் பயணம் மற்றும் பெர்செனெப் என்ற மனிதன் தனது மனைவி மற்றும் நாயுடன் காட்டப்படுவது உட்பட வாழ்க்கையின் தெளிவான காட்சிகளை இந்த ஓவியம் காட்டுவதாக லைவ் சயின்ஸ் வெளியிட்ட கட்டுரையிலும், Fox நியூஸ் வெளியிட்ட கட்டுரையிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கர்நாடகாவில் இடிக்கப்பட்ட மசூதிக்குள் கோவிலா ?| உண்மை என்ன ?
மேலும் படிக்க : இந்தோனேசியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவாலயமா ?
முடிவு :
நம் தேடலில், எகிப்து நாட்டில் உள்ள கிசாவில் பிரமிடுக்கு அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 4300 ஆண்டுகள் பழமையான மதகுருவின் கல்லறையின் புகைப்படத்தை இந்துக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.