எகிப்தில் இறந்த மனைவியின் உடலுடன் உடலுறவு கொள்ளலாம் என சட்டம் கொண்டுவர உள்ளதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
மனைவி இறந்து 6 மணிக்குள் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தை எகிப்து கொண்டு வர உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
எகிப்து நாட்டில் புதிய சட்டம் ஒன்று வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இணையதளத்தில் வெளியான செய்தியின் ஸ்கிரீன் ஷார்ட் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அச்செய்தியில், மனைவி இறந்து 6 மணி நேரத்திற்குள்ளாக இறந்த உடலுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என அந்நாடு சட்டம் இயற்ற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பரவும் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டில் 2012, ஏப்ரல் 27 தேதி உள்ளதைக் காண முடிகிறது. மேற்கொண்டு அவர்களது இணையதளத்தில் பரவக் கூடிய செய்தி குறித்துத் தேடினோம்.
2012ம் ஆண்டு ‘Egypt to bring in law allowing man to have sex with dead wife’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள எகிப்து நாட்டில், மனைவி இறந்த 6 மணி நேரம் வரை உடலுறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012ல் பல்வேறு இணையதளங்களிலும் இச்செய்தி இருந்தது.
மேற்கொண்டு இந்த சட்டம் குறித்து வேறு ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளதா எனத் தேடினோம். ‘அல்-அரேபிய நியூஸ்’ என்ற இணையதளத்தில் 2012, ஏப்ரல் 30ம் தேதி ‘Egypt’s MPs deny existence of sex-after-death law, confirm early marriage draft’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது.
அதில், பரவக்கூடிய சட்டம் குறித்த உண்மைத் தன்மை பற்றி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்த விளக்கங்கள் உள்ளது. நாடாளுமன்ற செயலாளர் சாமி மஹ்ரான் (Samy Mahran), அத்தகைய வரைவுச் சட்டம் எதுவும் இல்லை என்றும், இது தொடர்பாகத் தான் எதுவும் கேள்விப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘அஷ்ரஃப் அகோர் (Ashraf Agour) என்ற நாடாளுமன்ற உறுப்பினர், ‘இப்படி ஒரு விசயத்தைப் பாராளுமன்றத்தில் விவாதிக்கவே இல்லை’ எனக் கூறியுள்ளார்.
அதே போல், அல்-கராமா (Al-Karama) கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமீன் எஸ்கந்தர் (Amin Eskandar) என்பவர், எகிப்து நாடாளுமன்றத்தின் பொதுவான சூழ்நிலை இது போன்ற வதந்திகளால் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
மேலும், இறந்த மனைவியின் உடலுடன் உடலுறவு வைத்துக் கொள்ளச் சட்டம் வர உள்ளதாக வெளியான செய்திகள் குறித்து ‘Egypt Independent’ இணையதளத்தில் 2012, மே 9ம் தேதி கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், அந்த சட்டம் பற்றிய செய்திகள் பொய் என்பது பற்றியும், மேற்கத்திய ஊடகங்களின் இஸ்லாமோஃபோபியா பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கிஸா பிரமீடு மீது தென்படும் மூன்று கிரகங்கள்: அரிய நிகழ்வா ?
முன்னதாக எகிப்து நாட்டில் உள்ள கிஸா பிரமீடு மேலே புதன், வெள்ளி, சனி கிரகங்கள் வரிசையாக தோன்றிய அரிய நிகழ்வு என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவிய போது அதன் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், மனைவி இறந்து 6 மணி நேரத்திற்குள் அவரது உடலுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என எகிப்து சட்டம் கொண்டு வர உள்ளதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல. அப்படி எந்த சட்ட வரைவும் கொண்டு வரவில்லை என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே 2012ல் கூறியுள்ளதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.