பெரம்பூர் பள்ளியில் குழந்தைகளுக்கு அடி உதை ?

பரவிய செய்தி
பெரம்பூர் மிலியா இன்டர்நேஷனல் ஸ்கூலில் பச்சக்குழந்தைகளை அடித்து காலால் உதைக்கும் காட்சி. பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்தும் வரை தயவு செய்து பகிரவும்.
மதிப்பீடு
சுருக்கம்
எகிப்து நாட்டில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் மேலாளர் ஒருவர் குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்த காரணத்தினால் சிறைக்கு சென்றுள்ளார். அந்த வீடியோ கட்சி தான் இவை.
விளக்கம்
பெரம்பூரில் உள்ள மிலியா இன்டர்நேஷனல் ஸ்கூல் எனும் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களை அங்கு பணியாற்றுபவர் ஒருவர் அடித்தும், உதைத்தும் குழந்தைகளை கடுமையாக தாக்கும் வீடியோ பதிவை வெளியிட்டு பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யும் வரை பகிருமாறு கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இந்த பதிவானது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது உண்மையா ? பொய்யா ? என்றுக் கூட யோசிக்காமல் சிலர் தனியார் பள்ளியை மேற்கோள்காட்டி பகிர்ந்தும், திட்டியும் கூட இருப்பர். ஆனால், அவர்கள் தனியார் பள்ளி என பதிவிட்ட வீடியோ பதிவு 2014 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் என அறிய வாய்ப்பில்லை.
எகிப்து ஆதரவற்றோர் இல்லம் :
2014 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் மாணவர்களை மேலாளர் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ பதிவு ஒன்று ஊடகங்களில் வெளியாகி சர்சையாகியது. கிஸாவில் உள்ள மெக்கா ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை மேலாளர் ஒசாமா முகமத் ஒத்மன் கடுமையாக தாக்கியுள்ளார். அவரின் அனுமதி இன்றி குழந்தைகள் தொலைக்காட்சியை பார்த்ததாகவும், குளிர்சாதனப் பெட்டியை உபயோகித்தால் அடித்ததாக கூறியுள்ளார்.
குழந்தைகளை கொடுமைப்படுத்திய காட்சிகளை ஒசாமா முகமத் ஒத்மன்-வின் மனைவி வீடியோ பதிவு செய்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இச்செய்தி அதிகம் பரவி அந்நாட்டு அதிபரின் பார்வைக்கும் சென்றுள்ளது.
இதையடுத்து 2014 ஆகஸ்ட்டில் ஒசாமா முகமத் கைது செய்யப்பட்டார். அதன்பின் காப்பகத்தில் இருந்த குழந்தைகள் மற்றொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். குழந்தைகளை கடுமையாக தாக்கியது, அவர்களை அச்சுறுத்தி வேலை செய்ய வைத்தது என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 110 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
“ பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் 4 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள். ஒசாமா முகமத்-ன் அனுமதி இன்றி தொலைக்காட்சி பார்த்ததற்காக தாக்கியதாக கூறியுள்ளார்கள் “.
இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் ஆகின்றன. ஆனால், சமீபத்தில் இதன் வீடியோ காட்சியை எடுத்து தமிழகத்தில் நடந்ததாக பதிவிட்டு வருகிறார்கள். தனியார் பள்ளியின் மீது இருந்த வெறுப்பால் செய்தார்களா ? அல்லது தெரியாமல் செய்தார்களா ? என்று தெரியவில்லை. ஆனால், இது போன்று சில பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களை குறிப்பிட்டு வதந்திகளை பரப்புவதில் உள்நோக்கம் இல்லாமல் இருக்காது.