காசா மக்களுக்குத் தண்ணீர், உணவு கொண்டு செல்லும் எகிப்தியர்கள் எனப் பழைய வீடியோவை பதிவிட்ட மாலை மலர் !

பரவிய செய்தி
காசா மக்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல பாலைவனம் வழியாக பாலஸ்தீனத்திற்குச் செல்லும் எகிப்தியர்கள். இஸ்ரேலின் தொடர் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் எகிப்து மக்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.Facebook link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
காசா (Gaza) பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி பாலஸ்தீன ஹமாஸ் போராளிக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இஸ்ரேலியப் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலைக் காசா பகுதி மீது நிகழ்த்தியது. இதில் பல ஆயிரம் பேர் இறந்த நிலையில் நாளுக்கு நாள் போர் சூழல் மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில், காசா மக்களுக்கு எகிப்தியர்கள் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களைப் பாலைவனம் வழியாகக் கொண்டு செல்வதாக வீடியோ ஒன்றினை ‘மாலை மலர்’ தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோ குறித்து ஆய்வு செய்ததில் அது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே மோதல் ஏற்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.
இந்த வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் மாலை மலர் குறிப்பிட்டுள்ள இதே தகவலுடன் இம்மாதம் 13ம் தேதி (அக்டோபர்) ஒரு டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதன் கமெண்டில் ‘இந்த வீடியோ எகிப்துக்கும். லிபியாவுக்கும் இடையிலான கடத்தல்காரர்களைக் காட்டுகிறது’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவின் டிக்டாக் ஸ்கிரீன் ஷாட்டினை பதிவிட்டுள்ளனர்.
இதனைக் கொண்டு டிக்டாக்கில் தேடியதில் அது கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேற்கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் வேறு சில டிவிட்டர் பக்கத்திலும் இதே வீடியோ கடந்த செப்டம்பர் 1ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘லிபியா-எகிப்திய எல்லையில் என்ன நடக்கிறது?’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் யார்? என்ன பொருளைக் கொண்டு செல்கிறார்கள் என எந்த தகவலும் இல்லை.
ماذا يحدث على الحدود الليبية المصرية ؟ pic.twitter.com/JjdZcx3O91
— Libyan citizen- ﮼مواطن،ليبي (@Libyancitizen6) September 1, 2023
இருப்பினும் இது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு (மோதல் தொடங்கிய நாள் அக்டோபர், 7ம் தேதி) ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் இருப்பதைக் காண முடிகிறது. எனவே இந்த வீடியோவுக்கும் தற்போது நடக்கும் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மேலும் படிக்க : பாலஸ்தீனர்கள் போரில் காயம் அடைந்தது போல நாடகம் ஆடுவதாகத் தவறாகப் பரவும் பழைய விழிப்புணர்வு வீடியோ !
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே ஏற்பட்டுள்ள போருடன் தொடர்புபடுத்தி பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : ஹமாஸ் அமைப்பினர் பாராகிளைடரில் இஸ்ரேலுக்குள் நுழையும் போது மின்கம்பியில் சிக்கியதாகப் பரவும் தென்கொரியா வீடியோ!
முடிவு :
நம் தேடலில், காசா மக்களுக்கு எகிப்தியர்கள் உணவு மற்றும் தண்ணீரைப் பாலைவனம் வழியாகக் கொண்டு செல்கின்றனர் என மாலை மலர் வெளியிட்ட வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் தொடங்குவதற்கு முன்பாகவே அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது என்பதை அறிய முடிகிறது.