This article is from Jul 29, 2018

செல்லூர் ராஜீவை விஞ்சிய மத்திய அமைச்சரை தெரியுமா ?

பரவிய செய்தி

இந்திய வேதத்தில் உள்ள கோட்பாடுகள் ஐன்ஸ்டினின் E=mc2 என்ற கோட்பாட்டை காட்டிலும் சிறந்தது என்று மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

ஐன்ஸ்டினின் கோட்பாட்டை விட சிறந்த கோட்பாடுகள் இந்திய வேதத்தில் இருப்பதாக ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார் என்பதற்கு எத்தகைய ஆதாரங்களும் இல்லை.

விளக்கம்

ம்பால் நகரின் மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் மார்ச் 16-ம் தேதி  நடைபெற்ற 105-வது இந்திய அறிவியல் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அதில், உரையாற்றிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “ இந்து மதத்தின் வழக்கம் மற்றும் சடங்குகள் அனைத்து அறிவியலில் மூழ்கியுள்ளது. இந்தியர்களின் ஒவ்வொரு நவீன சாதனையும், நம் புராதன அறிவியல் சாதனைகளின் தொடர்ச்சி ஆகும். சிறந்த விஞ்ஞானி மற்றும் அண்டவெளி ஆய்வாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கை நாம் இழந்து விட்டோம். ஸ்டீபன் ஹாக்கிங் கூட நம் இந்திய வேத சாஸ்திரத்தில் ஐன்ஸ்டினின் E=mc2 கோட்பாட்டை விட சிறந்த கோட்பாடுகள் இருப்பதாக கூறியுள்ளார்.

உலகளவில் அறிவியலில் நாம் சிறந்து விளங்கி வருகிறோம். நானோ டெக்னோலஜி, வானிலை அறிக்கை, சுனாமி எச்சரிக்கை உள்ளிட்டவற்றில் தனித்துவமான இடத்தில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியவை அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில் 16-வது நிமிடத்தில் இடம் பெற்றுள்ளது. மத்திய அமைச்சரின் இத்தகைய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐன்ஸ்டீனின் E=mc2 கோட்பாடு :

அறிவியல் கண்டுபிடிப்புகளில் இன்று வரை மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது ஐன்ஸ்டினின் E=mc2 கோட்பாடு. ஐன்ஸ்டீனுக்கு முந்தைய விஞ்ஞானிகள் நிறையும் ஆற்றலும் தனித்தனியானவை என்ற கோட்பாட்டை முன்வைத்தனர். ஆனால், ஐன்ஸ்டின்  “ நிறையும்(m) ஆற்றலும்(E) தனித்தனியானவை அல்ல. ஆற்றல் பருப்பொருளாக மாறும், பருப்பொருள் ஆற்றலாக மாறும். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற சிறந்த கோட்பாட்டை 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ல் ஐன்ஸ்டின் சமர்பித்தார் “.

ஆற்றல் குறித்த ஐன்ஸ்டினின் இந்த கோட்பாட்டை விட சிறந்த கோட்பாடுகள் இந்திய வேத சாஸ்திரத்தில் இருப்பதாக ஸ்டீபன் ஹாக்கிங் எங்கு, எப்போது கூறினார் என்று இணையத்தில் தேடினால் அதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் பெயரில் உள்ள போலியான ஃபேஸ்புக் பக்கத்தில் 2011-ல் போடப்பட்ட பதிவு ஒன்றில் வேதக் கோட்பாடே சிறந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங் அண்டவியல் குறித்த ஆய்வாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். அவர் ஜோதிடத்தை மறுத்தவர் என்பது உலகறிந்தது. இந்திய வேத சாஸ்திரத்தில் ஐன்ஸ்டினின் கோட்பாட்டை விட மிகச்சிறந்த கோட்பாடுகள் இருப்பதாக ஸ்டீபன் ஹாக்கிங் கூறியனார் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. சமய சடங்குகள் மற்றும் வழக்கங்கள் அறிவியலை போதிக்கின்றன என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பது தவறில்லை. ஆனால், அதற்காக ஆதாரமற்ற கருத்துகளை கண்மூடித்தனமாக ஏற்க இயலாது அல்லவா!

மத்திய அமைச்சர்கள் அறிவியல் சார்ந்த அறிஞர்களின் கருத்துக்கள், கோட்பாடுகள் பற்றி தவறான தகவலை கூறுவதும், வேத நூல்கள் பற்றி உயர்த்தி பேசுவதும் ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் மத்திய அமைச்சர் சத்யபால் சிங் டார்வினின் மனித பரிமாணம் குறித்த கோட்பாடு தவறு என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader