புதிதாய் பயன்பாட்டிற்கு வரும் மின்சாரப் பேருந்துகள் | தமிழகத்திற்கு 525 பேருந்துகள் ஒதுக்கீடு !

பரவிய செய்தி
திருச்சி நகருக்கு 100 மின்சாரப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இயக்குவதற்காக ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் 5,595 மின்சாரப் பேருந்துகள் வழங்கவுள்ளது. இதில், தமிழகத்திற்கு 525 மின்சாரப் பேருந்துகளும், திருச்சி நகருக்கு 100 மின்சாரப் பேருந்துகளும் வழங்கப்பட உள்ளன.
மதிப்பீடு
விளக்கம்
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவையே அதிகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோன்று, அரசின் மூலம் மின்சாரத்தால் இயங்கக்கூடிய பேருந்துகளை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நாட்டில் முக்கிய நகரங்களுக்கு பேருந்துகளின் எண்ணிக்கையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் சார்பில் ” ஃபேம் இந்தியா (FAME-India) ” திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிற்கும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய 5,595 பேருந்துகளை வழங்க உள்ளனர். இதில், தமிழகத்திற்கு 525 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
FAME (Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India) திட்டத்தின் மூலம் நாட்டில் மின்சாரப் பேருந்துகளை இயக்குவது தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கோரியிருந்தது. அதில், 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து 14,9998 மின்சாரப் பேருந்துகள் வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருந்தன.
இதனை பரிசீலித்த மத்திய அமைச்சகம் 66 நகரங்களுக்கு 5,065 மின்சாரப் பேருந்துகளுக்கு அனுமதி அளித்து உள்ளது. இதனுடன், நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு 525 மின்சாரப் பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 525 மின்சாரப் பேருந்துகள் வழங்கப்பட உள்ளன. அதில், கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு தலா 300 பேருந்துகளும், ஈரோடு, சேலம் வேலூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு தலா 50 பேருந்துகளும், தஞ்சாவூருக்கு 25 பேருந்துகளும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் முன்னோட்டமாக முதல் இரண்டு மின்சாரப் பேருந்துகள் சென்னையில் இம்மாதத்தில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேருந்துகள் திருவான்மியூர்-சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோயம்பேடு-ப்ராட்வே பாதையில் இயக்கப்படும். தனியார் ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலாண்ட் மூலம் உருவாக்கப்படும் பேருந்துகள் எம்.டி.சி மூலம் இயக்கப்படும்.
” பேருந்தின் நீளத்தை பொறுத்து மின்சாரப் பேருந்துகள் தயாரிக்க தோராயமாக ரூ.1.5 – ரூ.2 கோடி வரை செலவாகும். அதில், மானியமாக மத்திய அரசு ஒவ்வொரு பேருந்திருக்கும் ரூ.55 லட்சம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த பேருந்துகள் மாநில போக்குவரத்து கழகத்தின் சார்பில் வாங்கப்படும் மற்றும் இயக்கப்படும் ” என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 725 மின்சாரப் பேருந்துகளும், உத்தரப்பிரதேசத்திற்கு 600 பேருந்துகளும், குஜராத்திற்கு 550 பேருந்துகளும், தமிழகத்திற்கு 525 பேருந்துகளும் வழங்கப்பட உள்ளன.
அந்த பேருந்துகளை ஒப்பந்தக் காலத்தில் 400 கோடி கிலோ மீட்டர் தொலைவிற்கு இயக்க முடியும் என்றும், இதன் மூலம் 120 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படுவதோடு, 260 கோடி டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியாவது தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாசுபாட்டை குறைக்க மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து இருப்பது மகிழ்ச்சிகரமான ஒன்று. எனினும், மின்சாரப் பேருந்துகள் திட்டத்தை முறையாக தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்.