இனி மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜிஎஸ்டி வரியா ?

பரவிய செய்தி
மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு ! எல்.இ.டி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் !
மதிப்பீடு
விளக்கம்
ஆளும் பாஜக அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்யக்கூட இனி 5% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என முடிவு செய்து உள்ளதாகக் கூறி ஆனந்த விகடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
What kind of govt is this https://t.co/RtQywFRScI
— Kotravai (@kotravai_n) July 7, 2022
உண்மை என்ன ?
மின் மயானங்களில் உடல்களை தகனம் செய்ய குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கொரோனா பேரலைகளின் போது இறந்தவர்களின் உடல்களை எரிக்க 5 ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை அதிக கட்டணத்தை ஊழியர்கள் வசூலிப்பதாக புகார்கள் பல எழுந்தது. ஆனால், மின் மயானத்தில் உடலை தகனம் செய்ய ஜிஎஸ்டி வரி விதிப்பதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
2022 ஜூன் 29-ம் தேதி 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள் வழங்கப்பட்டது. அந்த பரிந்துரைகளில், மின் மயானம் தொடர்பான பரிந்துரைகள் ஏதும் இடம்பெறவில்லை. மாறாக, சேவைகள் பிரிவில் சாலைகள், பாலங்கள், இரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு போன்றவற்றுக்கான பணி ஒப்பந்தத்திற்கு ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக இடம்பெற்றுள்ளது.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து ஆனந்த விகடன் முகநூல் பக்கத்தில் தேடிய போது, மின் மயானத்திற்கு இனி ஜிஎஸ்டி வரி என எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. ஆனந்த விகடனில் நிர்மலா சீதாராமன் பற்றித் தேடுகையில் பிப்ரவரி 1-ம் தேதி, ” 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் ” என நிர்மலா சீதாராம் பேசிய உரையின் செய்தியே கிடைத்தது.
மேற்காணும் நியூஸ் கார்டில், ” மின் மயானத்திற்கு இனி ஜிஎஸ்டி வரி ” என போலியான செய்தியை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளதாகப் பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.