கோவில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8 , சர்ச் மசூதிக்கு ரூ.2.85 என பாகுபாடா ?

பரவிய செய்தி

கோயில்களுக்கு மின் கட்டணம் 1 யூனிட்க்கு ரூ 8 , சர்ச் மற்றும் மசூதிகளில் 1 யூனிட்க்கு ரூ.2.85. இதுவா மதச்சார்பின்மை ? ஏன் இந்த பாகுபாடு.

மதிப்பீடு

விளக்கம்

இந்து கோவில்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்க்கு 8 ரூபாயும், அதே ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சர்ச் மற்றும் மசூதிகளில் ரூ 2.85 மட்டுமே வசூலிக்கப்படுவதாக ஓர் தகவல் முகநூல், வாட்ஸ் அப் குழுக்களில் நீண்ட நாட்களாக உலாவி வருகிறது. இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

மின் இணைப்பு மற்றும் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணங்கள் அனைத்தும் அந்தந்த மாநில அரசு துறைகளின் கீழே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமான தமிழ்நாட்டில் வசிப்பிடங்கள், வழிபாட்டு தலங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டு இருக்கும் கட்டண விவரங்கள் மற்றும் யூனிட் அளவுகளுக்கு ஏற்ப அளிக்கப்படும் மானியம் உள்ளிட்டவையை எடுத்துக் கொள்வோம்.

Advertisement

2017-ம் ஆண்டில் TANGEDCO வெளியிட்ட ”  Determination of Tariff for Generation and Distribution ”  என்ற தரவுகளில், பொதுவாக உள்ள மக்கள் வழிபாட்டு தலங்கள் என்ற வார்த்தையையே பயன்படுத்தி உள்ளனர். மக்களின் வழிபாட்டு தலங்களான கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்தும்  ” Places of Public Worship ” என்ற ஒரே பிரிவாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

அவற்றிற்கு வழங்கப்படும் மின் மற்றும் கட்டண அளவுகள் ஒன்றே. எனினும், அத்தகைய வழிபாட்டு தலங்களில் பயன்படுத்தப்படும் மின் வழங்கல் முறையின் அடிப்படையில் அரசின் மானியத்தில் மாற்றம் உள்ளது.

2017-ம் ஆண்டு TNERC ஆனது ” Revised Tariff rates with effect from 11.08.2017 Approved rate and payable by the Consumer ” என வெளியிட்ட அறிவிப்பின் படி, ” High Tension supply ” கொண்ட வழிபாட்டு தலங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 6.35 ரூபாய் எனக் குறிப்பிட்டு உள்ளனர். அதற்கு மானியம் போகவும் அதே அளவே.

Advertisement

” Low tension supply ” கொண்ட பிரிவில் வழிபாட்டு தலங்களுக்கு 0-120 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு TNERC நிர்ணயித்த கட்டணம் ஒரு யூனிட்க்கு ரூ.5.75, மானியம் போக மீதம் செலுத்த வேண்டிய தொகையே யூனிட்க்கு ரூ.2.85 ஆக இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். இதில், 120 யூனிட்களுக்கு மேல் சென்றால் மானியம் இன்றி ஒரு யூனிட்க்கு 5.75 ரூபாய் என்ற கணக்கிலேயே கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

2018 செப்டம்பரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வசிப்பிடத்திற்கு உண்டான கட்டண அளவே வசூலிக்கப்படும் என உத்தரப் பிரதேச மாநிலத்தின் மின்துறை அமைச்சர் அறிவித்து உள்ளார். இதனால், கோவில்கள், தேவாலயம், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் பயன்பெறும் எனக் கூறியிருந்தார் “.

ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்ப கட்டண அளவுகள் மாறுபடலாம். நாம் தமிழ்நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு அளித்த கட்டண விவரத்தை உதாரணமாக கூறியுள்ளோம். தனித்தனியாக கோவில்களுக்கு ஒரு கட்டண அளவுகள் , மசூதிக்கு மற்றும் தேவாலயங்களுக்கு ஒரு கட்டண அளவுகள் என்று எங்கும் குறிப்பிடவில்லை. வழிபாட்டு தலங்கள் என்றே கூறியுள்ளனர். எனினும், வழிபாட்டு தலங்களில் பயன்படுத்தி வரும் மின் வழங்கல் முறைகள் மற்றும் அளவுகளுக்கு ஏற்பவே மானியம் மற்றும் கட்டணங்கள் மாறுகின்றன.

மேலும் கூடுதல் தகவலுக்காக யூடர்ன் தரப்பில் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சென்னை தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. மின்துறையிடம் இருந்து தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதையும் பின்னர் இணைக்க உள்ளோம்.

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, ” கோவில்களுக்கு மின் கட்டணமாக ஒரு யூனிட்க்கு 8 ரூபாய் என்றும், சர்ச் மற்றும் மசூதிகளுக்கு ஒரு யூனிட்க்கு 2.85ரூ என பாகுபாட்டுடன் வசூலிக்கப்படுவதாக பரவி வரும் தகவல் தவறானவை ” என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Youturn கடந்த மூன்றாண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்திட்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்

Subscribe to Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker