கழிப்பறை நீரை குடிக்க வரும் யானைகள் | எங்கே நிகழ்ந்தது ?

பரவிய செய்தி
கடைசியாக தண்ணீருக்கு யானைகளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்திடோமே நாம !
மதிப்பீடு
சுருக்கம்
உப்புச்சுவை குறைவாக இருப்பதால் விடுதியில் உள்ள கழிவறை, குளிக்கும் இடத்தில் இருக்கும் நீரை குடிக்க யானைகள் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், அதனை மக்கள் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகின்றனர்.
விளக்கம்
கோடைக்காலத்தில் விலங்குகள் நீரின்றி சுற்றிச் திரியும் சூழல் அதிகரித்து விட்டது என்பதை அனைவரும் நம் கண்முன்னே காண்கிறோம். கோடைக்காலம் தவிர்த்தும் நீருக்காக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் விலங்குகள் வருவது இயல்பாகி போனது.
இந்நிலையில், யானை ஒன்று கழிப்பறை குழாயில் இருக்கும் நீரை தன் தும்பிக்கையால் உறிஞ்சி குடிப்பது போன்று இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.
இது உண்மையான நிகழ்ந்து சம்பவத்தின் போது எடுக்கப்பட்டவை தான். ஆனால், அப்படங்கள் இந்தியாவை சேர்ந்தவை அல்ல. மேலும், இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ளன.
தென் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானா என்ற நாட்டில் “ Elephant Sand lodge ” அமைந்துள்ளது. யானைகள் அதிகம் நடமாடும் பகுதியில் மக்கள் சுற்றுலா செல்ல விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் தங்க கூடிய குடிலுக்கு அருகே உள்ள நீர்த்தேக்கத்தில் யானைகள் நீர் அருந்த, விளையாட வரும் காட்சிகளை காண முடியும் என அந்த விடுதியின் தளத்தில் கூறியுள்ளனர்.
அங்கு அமைக்கப்பட்ட கழிப்பறைகள், குளிக்கும் இடத்தில் இருக்கும் குழாய்களில் இருக்கும் நீரை குடிக்க யானைகள் தொடர்ச்சியாக வருவதாக 2015-ம் ஆண்டு செய்தி ஒன்றில் வெளியாகி உள்ளது.
மேலும், அதற்கு காரணம் கழிப்பறை மற்றும் குளிக்கும் இடத்தில் உள்ள நீரில் உப்பு சுவை குறைவாக இருப்பதால் அந்நீரை குடிக்க யானைகள் விருப்பி வருவதாக கூறியுள்ளனர்.
இந்நிகழ்வைத் தவிர்த்து, நம் இந்தியாவிலேயே தண்ணீர் தட்டுப்பாடு உயர்ந்து கொண்டே செல்கிறது. மனிதர்களால் கூட தாங்க முடியாத தண்ணீர் தட்டுப்பாட்டை வனவிலங்குகள் எவ்வாறு தாங்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அதனை சரி செய்ய முயற்சிகளும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.