விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க தேன்கூடு வேலி.. இந்தியாவிலும் சோதனை முயற்சி !

பரவிய செய்தி

யானைகள் தேனீக்களை பார்த்து பயப்படும் சுபாவம் கொண்டவை. அதனால் ஆப்ரிக்க நாடுகளில் மின்சார வேலிகளுக்கு பதிலாக தேன்கூடு வேலிகளை விவசாயிகள் அமைக்கிறார்கள். இதனால் யானைகள் உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது. தேனீக்கள் உதவியால் மகரந்த சேர்க்கை அதிகமாக இருப்பதால் விளைச்சலும் அதிகமாக இருக்கிறதாம்.

மதிப்பீடு

விளக்கம்

காடுகள் மற்றும் மலையடி வாரங்கள் அருகே வசிக்கும் மக்கள் தங்கள் நிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை, தோட்டங்களை நாசம் செய்வதை தடுக்கவும், யானை மற்றும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் மோதலாலும் மின்சார வேலிகளை அமைப்பதுண்டு. இன்னும் சிலர் யானைகளை விரட்டுவதற்கு சட்ட விரோதமாக மின் வேலிகளை அமைப்பதால் யானைகள் இறக்கும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது.

மேற்காணும் தகவலில் கூறுவது போன்று, யானைகளுக்கு தேனீக்களை கண்டால் ஆகாது. ஆப்ரிக்க நாட்டில் யானைகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுப்பதற்கு தேன்கூடுகளை கொண்டு வேலிகளையும் அமைத்து இருக்கிறார்கள்.

பயிர் சேதத்தைக் குறைக்கவும் மற்றும் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையேயான மோதல் நிகழ்வுகளைக் குறைக்கவும் உதவும் வகையில் ஆப்ரிக்க தேனீக்கள் மீதான யானைகளின் பயத்தைப் பயன்டுத்தி புதுமையான ஆராய்ச்சியின் அடிப்படையில் கென்யாவின் தேசிய பூங்கா பகுதியில் திட்டத்தை செயல்படுத்தியும் இருக்கிறார்கள். இந்த விருது பெற்ற ஆராய்ச்சி திட்டத்தை நிறுவிய லூசி கிங், 2019-ல் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற TED-ல் தனது உரையை நிகழ்த்தி இருக்கிறார்.

இந்தியாவில் சோதனை முயற்சி :

” காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் (KVIC) தேனீக்களைப் பயன்படுத்தி யானைகள் மற்றும் மனிதத் தாக்குதல்களைக் குறைத்தல் (RE-HAB) திட்டத்தின் கீழ், கர்நாடகாவின் குடகுவில் உள்ள சேலூர் கிராமத்திற்கு அருகே உள்ள பல்வேறு இடங்களில் தேனீக்களை கொண்ட பெட்டிகள் வைக்கப்பட்டன. இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் 15 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டதாக ” 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இந்த முயற்சியைப் பாராட்டிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, யானைகள் தேன்கூடுகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்ட பகுதியில் திரும்பி செல்லும் சிசிடிவி காட்சிகளையும் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

” அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர் மகசூலைக் கூட்டுவதில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால் தேனீக்களை மேலை நாட்டினர் வேளாண் தேவதைகள் எனப் போற்றுகின்றனர் ” என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், யானைகளை பயிர் நிலங்களில் இருந்து விரட்ட தேன்கூடுகளை கொண்ட வேலிகளை அமைப்பது உண்மையே. இந்த சோதனை முயற்சி இந்தியாவிலும் கூட மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. யானைகள் மற்றும் மனித மோதலைக் குறைப்பதற்கும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை குறைக்கவும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button