யானைகளை மதம் மாற்றி வேளாங்கண்ணி சர்ச்சில் சேர்த்ததாக வதந்தி !

பரவிய செய்தி
அஸ்ஸாம் யானைகள் ரெண்டை வாங்கிட்டு வந்து ஞானஸ்தானம் செய்து பீட்டர் மற்றும் மரியாள் என பெயர்சூட்டி வேளாங்கண்ணி சர்ச்சில் சேர்க்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
யானையின் முன்பாக தேவாலயத்தின் பாதிரியார் நிற்கும் புகைப்படத்தை வைத்து யானையை கூட மதமாற்றம் செய்கிறார்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளத்தில் வைரல் செய்யப்படுகிறது. தற்போது அதே புகைப்படத்தை வைத்து, அசாம் யானைகளை மதம் மாற்றம் செய்து தமிழகத்தின் வேளாங்கண்ணி தேவாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.
Reportedly an elephant in Kerala has been Converted to Christianity. Was he a Hindu before Conversion ? This is Most literate State in entire Galaxy with Literacy Rate of 1000000000000% pic.twitter.com/9YkTiKmnyY
— Dr. APR 🇮🇳🍁 (@drapr007) July 10, 2020
யானையை மதம் மாற்றம் செய்வதாக பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், தேவாலயத்தில் இருக்கும் யானையின் புகைப்படம் குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
யானையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேர்ஜ் சேர்ச் செய்கையில், ” வரலாற்றில் முதல் முறையாக யானையை மதம் மாற்றி உள்ளதாக சமூக வலைதள தகவல்கள் கூறுகின்றன : ஆனால் தேவாலயம் இது ஞானஸ்தானம் அல்ல, ஆசீர்வாதம் ” என 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியான மலையாளம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கிடைத்தது.
” 2017-ல் கேரளாவின் அருவிதுராவில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் ஃபோரோனா கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியார் யானையின் மீது புனித நீரை தெளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. வரலாற்றில் முதல் முறையாக யானையை மதம் மாற்றி உள்ளார்கள் என பரவிய காரணத்தினால் தேவாலயத்தின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பிரபல அரசியல்வாதியான பி.சி.ஜார்ஜ் குடும்பத்தினர் வாங்கிய மகாதேவன் எனும் யானைக்கு தேவாலயத்தில் ஆசிர்வாதம் செய்துள்ளனர் ” என செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
தேவாலயத்தின் பாதிரியார் யானையின் மீது புனித நீரை தெளிக்கும் மற்றொரு புகைப்படமும் மலையாள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.
கேரளாவில் 7 முறை சட்டமன்ற உறுப்பினரான பி.சி.ஜார்ஜ் ஐஏஎன்எஸ்-க்கு அளித்த தகவலில், ” எங்களது குடும்பத்தில் பல ஆண்டுகளாக 50 யானைகள் உள்ளன. ஆசிர்வதிக்கப்பட்ட யானை எனது உறவினருக்கு சொந்தமானது. யானையின் பெயர் மகாதேவன், வயது 20. இந்த ஆசீர்வாதம் யானையின் பெயரை மாற்றுவதற்கானது என அர்த்தமில்லை. தயவுசெய்து மகாதேவன் ஆசிர்வதிக்கப்பட்டதில் இருந்து யானையின் பெயர் மாற்றப்படப்போகிறது என்பதை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். யானைக்கு கிறித்துவ பெயர் வைக்கப்படாது ” எனத் தெரிவித்ததாக பிசினஸ் ஸ்டாண்டர் செய்தியில் 2017-ல் வெளியாகி இருக்கிறது.
2017-ல் கேரளா தேவாலயத்தில் மகாதேவன் எனும் யானை ஆசிர்வதிக்கப்பட்டு சர்ச்சையான புகைப்படத்தை மீண்டும் எடுத்து தமிழகத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தில் மதம் மாற்றம் செய்யப்பட்ட யானைகள் சேர்க்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், அசாம் யானைகள் இரண்டை வாங்கி பீட்டர் மற்றும் மரியாள் என மதம் மாற்றி வேளாங்கண்ணி தேவாலயத்தில் சேர்க்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.