தீவிர சனாதன சங்கியான எலான் மஸ்க் எனத் தவறாகப் பரப்பப்படும் AI படம் !

பரவிய செய்தி
தீவிர சனாதன சங்கி எலோன் மஸ்க்.
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சந்தித்துப் பேசினர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் முதலீடு செய்ய முன்வருமாறு எலான் மஸ்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் எலான் மஸ்க் பேசுகையில், இந்தியாவுக்குச் சரியானது எதுவோ அதைச் செய்ய மோடி விரும்புகிறார். மேலும், அவர் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், வெளிப்படையாகவும் இருக்க விரும்புகிறார். நான் மோடியின் ரசிகன் எனக் கூறினார். இதனை மோடியின் ஆதரவாளர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
தீவிர சனாதன சங்கி எலோன் மஸ்க் 🔥🔥🔥 pic.twitter.com/Mg3PNMPU1U
— ૐ ராரா ૐ (@RaRa_OneManArmy) June 21, 2023
இந்நிலையில், எலான் மஸ்க் காவி துண்டு, காவி வேட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய படம் குறித்து எலான் மஸ்கின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தேடுகையில் அவ்வாறு எந்த படமும் பதிவிடப்படவில்லை. அப்படத்தில் ‘@HOKAGEMODISAMA’ என்று வாட்டர் மார்க் உள்ளது. அப்பெயரைக் கொண்டு இணையத்தில் தேடியதில் ‘Hokage Modi Sama’ என்ற டிவிட்டர் பக்கத்தில் பரவக் கூடிய எலான் மஸ்க்கின் படத்தினை 2023, ஜூன் 21ம் தேதி முதலில் பதிவிட்டுள்ளார் என்பதை அறிய முடிந்தது.
அவரது பயோவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைப்புகளைக் (link) குறிப்பிட்டிருந்தார். அவற்றிலும் எலாம் மஸ்க் இந்து மத அடையாளங்களுடன் இருக்கும் படத்தினை பார்க்க முடிகிறது.
அவரது பேஸ்புக் பதிவில் Mid journey, ai artwork எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Hindu AI Artist’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
எனவே பரவக் கூடிய படம் AI (Artificial intelligence) தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டதா என அறிய, ‘hugging face’ என்ற இணையதள மூலம் ஆய்வு செய்தோம். அதன்படி அப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிந்தது.
மேலும் படிக்க : பிரதமர் மோடியின் புதிய உடை அலங்காரம் எனத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !
இதற்கு முன்னர் AI மூலம் உருவாக்கப்பட்ட பிரதமர் மோடி, நடிகர் ராக் ஆகியோரின் படங்களை உண்மை என பரப்பினர். அவற்றின் உண்மைத் தன்மையையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : ஹாலிவுட் நடிகர் ராக் இந்து மதத்திற்கு மாறியதாக தவறாகப் பரப்பப்படும் AI படங்கள் !
முடிவு :
நம் தேடலில், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இந்து மத அடையாளங்களான காவி உடையில் நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படமானது AI உதவியுடன் உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.