குவியும் சடலங்களின் குழப்பதால் ஊழியர் உடல் எரிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
குவியும் சடலங்களால் குழப்பம் : அசந்து தூங்கியவர் உயிருடன் தகனம். 15 நொடிகளில் சாம்பலான பரிதாபம்.
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துக் கொண்டிருக்கையில் பணியில் இருந்த ஊழியர் உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது இறந்து விட்டதாக எண்ணி அவரின் உடலை தகனம் செய்த சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக ஓர் செய்தி நியூஸ்18 தமிழ் கட்டுரை தலைப்புடன் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
” நியூயார்க் இறுதி சடங்கு கூடம் ஒன்றில் வேலைபார்க்கும் 48 வயதான மைக்கேல் ஜோன்ஸ் 16 மணி நேரம் தொடர்ச்சியாக வேலைப் பார்த்து உள்ளார். இதன் காரணமாக அசதியால் அங்கிருந்த ஸ்ட்ரெக்சரில் அசந்து தூங்கி உள்ளார். அவருடன் வேலைப்பார்க்கும் சகஊழியர் இறந்தவரின் சடலம் என்று தவறாக நினைத்து அவரை உயிருடன் தகனம் செய்துள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக ” வைரலாகும் செய்திகளில் இடம்பெற்று இருக்கிறது.
இது குறித்து தேடிய பொழுது, ஏப்ரல் 11-ம் தேதி ” Weekly Inquirer ” எனும் satire இணையதளத்தில் ” NEW YORK, NY: EXHAUSTED FUNERAL HOME EMPLOYEE CREMATED BY MISTAKE WHILE TAKING A NAP ” என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருக்கிறது. நையாண்டித்தனமாக வெளியிடும் செய்திகளில் உண்மைத்தன்மை இருப்பதில்லை அல்லது நிஜத்தில் இருக்கும் நபர்களை வைத்து நடக்காத செய்தியை வெளியிடுவார்கள்.
Weekly Inquirer-ல் வெளியான இச்செய்தி பல இணையதளங்களில் உண்மை என நினைத்து வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்றாக நியூஸ்18 தமிழ் இணையதளமும் அச்செய்தியை முதலில் வெளியிட்டு இருந்தது. எனினும், பின்னர் அதே லிங்கில் செய்தியின் உண்மை என்ன என்பதை போல் தலைப்பு மற்றும் செய்தியை மாற்றியுள்ளனர். ஆனால், நியூஸ்18 தமிழில் முதலில் வெளியான கட்டுரையே தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.