இங்கிலாந்தில் இந்துக் கோயிலை சேதப்படுத்திய முகமது ரிஸ்வான் தாக்கப்பட்டதாகப் பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
இங்கிலாந்து..இந்து கோவிலை சேதபடுத்திய முகமது ரிஸ்வான்.. போலீஸார் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் போது பாடம் புகட்டிய அப்பகுதி இந்துக்கள்.. சாதுமிரண்டால்காடுகொள்ளாது.
மதிப்பீடு
விளக்கம்
முகமது ரிஸ்வான் என்ற இஸ்லாமியர் இங்கிலாந்தில் உள்ள இந்து கோயிலைச் சேதப்படுத்தியதாகவும், அவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது அங்குள்ள இந்துக்கள் அவரை தாக்கினர் (பாடம் புகட்டினர்) என வீடியோ ஒன்றினை ‘பழனிசாமி’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சம் பேர் அந்த வீடியோவினை பார்த்துள்ளனர். மேலும் வலதுசாரிகள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களிலும் அவ்வீடியோவினை பரப்பி வருகின்றனர்.
— Rama (@Sastha93883062) August 21, 2023
உண்மை என்ன ?
இங்கிலாந்தில் இந்து கோயிலை இஸ்லாமியர் ஒருவர் இடித்ததாகப் பரவும் வீடியோவின் கீ ஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அது 2022ம் ஆண்டு ஹிஜாப் தொடர்பாக லண்டனில் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.
ஈரானில் இஸ்லாமிய மத நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்படி மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்ற 22 வயது பெண் ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக 2022 செப்டம்பர் 13ம் தேதி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அமினி செப்டம்பர் 16ம் தேதி உயிரிழந்தார்.
அவருக்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டு இறந்ததாக அந்நாட்டுக் காவல்துறையினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. அமினியின் பெற்றோர் தரப்பில் தங்கள் மகளுக்கு அப்படி எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறப்பட்டது. மேலும் அவரை கைது செய்யும் போது காவல் துறையினரால் தாக்கப்பட்டார் என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறினார்.
ஈரானில் அரசின் இத்தகைய அதிகாரப் போக்கினை கண்டித்து பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றது. அது தொடர்பாக ‘Hindustan times’, ‘Indian Express’ போன்ற ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது பரவக் கூடிய வீடியோவும் அத்தகைய போராட்ட சம்பவத்தின் ஒரு பகுதிதான்.
‘Daily Mail’ எனும் யூடியூப் பக்கத்தில் 2022 செப்டம்பர் 26ம் தேதி ஈரான் ஹிஜாப் சம்பவம் தொடர்பாக லண்டனில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது என வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளனர். அதில், 3வது நிமிடத்திற்கு மேல் பரவக் கூடிய வீடியோவில் உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதனை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக ஒரு தவறான செய்தியாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், இங்கிலாந்தில் இந்து கோயிலை இடித்த இஸ்லாமியரை இந்துக்கள் தாக்கியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2022ம் ஆண்டு ஹிஜாப் தொடர்பாக லண்டனில் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது. அதனை இந்து முஸ்லீம் இடையே வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக ஒரு பொய்யான தகவலோடு பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.