‘இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பிரிட்டன்’ கேட்டு முஸ்லீம்கள் வன்முறையில் ஈடுபடுவதாகப் பரப்பப்படும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுவதுதான் அவன்க வேலையே,  Islamic republic of Britain வேணுமாம். இதைப் பார்த்தாவது ஐரோப்பிய நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

சமீப வருடங்களாக இங்கிலாந்து நாட்டில் மதரீதியான வெறுப்புணர்வும், மதரீதியான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்து நாட்டில் உள்ள லீசெஸ்டர் (Leicester) நகரில் இந்து மற்றும் முஸ்லீம் மதத்தினர் இடையே கலவரம் மூண்டது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது.

இந்நிலையில், முஸ்லீம்கள் “இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பிரிட்டன்” (london mus) கேட்பதாகவும், வேலைக்காகவும், புலம்பெயர்ந்து வந்த முஸ்லீம்கள் தற்பொழுது இங்கிலாந்தை கலவரங்கள் மூலம் கைப்பற்ற எண்ணுவதாகவும், இதை பார்த்தாவது ஐரோப்பிய ஒன்றியங்கள் திருந்த வேண்டும் எனக் கூறி வீடியோ ஒன்றை ட்விட்டர் உள்ளிடவையில் வைரல் செய்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

நாம் அந்த வீடியோக்களின் உண்மை தன்மையை ஆராய்ந்த போது, அதில் மூன்று வீடியோக்கள் இணைக்கப்பட்டு உள்ளன என அறிய முடிந்தது.

அந்த வீடியோ முதல் பகுதி (0.00-0.08) கடந்த 2019 ஆம் ஆண்டு லண்டனில் இஸ்லாமியர்கள்  அவர்களது புனித நாளான ஆஷுரா தினத்தை( Ashura Day) முன்னிட்டு மேற்கொண்ட அமைதி ஊர்வலம். இதை Anti NWO Alliance என்னும் முகநூல் பக்கமும் பதிவாகி இருக்கிறது.

Facebook link 

வீடியோவின் இரண்டாவது பகுதி (0.09-0.21), கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டு  (Geroge Floyd)  மரணத்திற்கு நீதி கேட்டும், நிற பாகுபாட்டை எதிர்த்தும் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிஸ்டல் (Bristol) நகரில் போராட்டம் நடந்ததாக 2022 ஆகஸ்ட் 7ம் தேதி பிபிசி வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அந்தப் போராட்டத்தில்  17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகரான எட்வர்ட் கோல்ஸ்டோன் (Edward Colston) சிலையை தகர்த்து அதை ஆற்றில் வீசி தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர். எட்வர்ட் கோல்ஸ்டோன் 17 ஆம் நூற்றாண்டில் 80 ஆயிரம்  ஆப்பிரிக்க மக்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியதால் அவரது சிலையை தகர்த்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

வீடியோவின் மூன்றாம் பகுதியில் (0.22-0.45) வரும் வன்முறை காட்சி குறித்து தேடுகையில்,  கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் (Brixton) என்னும் பகுதியில் போதிய அனுமதி வாங்காமல், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட ஸ்ட்ரீட் பார்ட்டியினை (Street Party) போலீசார் தடுத்து நிறுத்தியதால், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதாக மிரர் ( Mirror) மற்றும் பிபிசி தளங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பிரிட்டன் கோரிக்கையை முன்வைத்து இஸ்லாமியர்கள் இங்கிலாந்தில் போராடுவதாக பரப்பப்படும் வீடியோ முற்றிலும் தவறானது. இந்த வீடியோவில் வரும் காட்சிகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் வன்முறை காட்சிகளை எடிட் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader