இங்கிலாந்து கோப்பையை வென்றதற்கு RSS ஆதரவாளர்கள் நடனமாடினார்களா ?

பரவிய செய்தி
2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்ற பிறகு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையிடத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடனமாடிக் கொண்டாடுகின்றனர்.
மதிப்பீடு
விளக்கம்
2019-ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆட்டம் ட்ரா ஆகியதால் சூப்பர் ஓவர் முறையில் ஆடினர். இதில், நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றது.
இந்நிலையில், இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதற்கு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் கொண்டாடியதாக ஆதரவாளர்கள் நடனமாடும் வீடியோ காட்சியை Impulsive indian எனும் முகநூல் பக்கத்தில் 10 மணி நேரங்களுக்கு முன்பாக பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவும் நூற்றுக்கணக்கான லைக், ஷேர்களை பெற்று இருக்கிறது. இதன் உண்மைத்தன்மையை பற்றி Youturn ஃபாலோயர் ஒருவர் வினவி இருந்தார்.
உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. பல போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3 அல்லது 6 மணி அளவிலேயே தொடங்கும். ஆகையால், போட்டிகள் முடியும் நேரம் இந்தியாவில் நள்ளிரவாக இருக்கும்.
நேற்றைய இறுதிப் போட்டியிலும் ஆட்டம் முடிவடைய இந்தியாவில் நள்ளிரவைத் தாண்டியது. ஆனால், வீடியோவில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் ஆடுவது பகலில் என்பதை தெளிவாக பார்க்க முடிந்தது. ஒருவேளை இன்று காலையில் வீடியோ எடுத்து இருக்கலாம் என நினைத்தால், இந்த வீடியோவை 10 மணி நேரத்திற்கு முன்பே Impulsive indian பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.
இது தொடர்பான தேடலில், ” மஹாராஷ்டிரா மாநில முதலைச்சர் தேவேந்தர் பட்னாவிஸ் மற்றும் கேபினட் அமைச்சர்கள் ஒன்றாக நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் பைய்யாஜி ஜோஷியை சந்திக்க வருவதற்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் நடமானடியதாக ” செய்தி ஒன்று கிடைத்து.
” RSS Activist Seen Dancing Before Meeting in Nagpur ” என்ற தலைப்பில் indiaTv என்ற youtube சேனலில் டிசம்பர் 17, 2015-ல் பதிவிட்டு இருந்தனர்.ஆக, 2015-ல் நாகப்பூர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடனமாடியதை 2019 உலகக்கோப்பை போட்டிக்காக ஆடியதாக தற்பொழுது பகிர்ந்து வருகின்றனர்.
முடிவு :
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தற்பொழுது தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.