கேரளாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ” என்டே கூடு ” திட்டம்.

பரவிய செய்தி

மதிப்பீடு

சுருக்கம்

கேரளாவில் முக்கிய நகரங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் இலவசமாக மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை பாதுகாப்பாக பேருந்து நிலையத்தில் தங்க “ என்டே கூடு “ எனும் திட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

விளக்கம்

பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் பல பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வருகின்றனர். அப்பொழுது தவிர்க்க முடியாத காரணத்தினால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தங்குகின்றனர்.

சில பெண்கள் மற்றும் குழந்தைகள் உடன் வரும் தாய்மார்கள் இக்கட்டான சூழ்நிலையில் பொது இடங்களில் இரவு நேரங்களில் இருக்கும் போது பாதுகாப்பற்றச் சூழலைச் சந்திக்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பற்றச் சூழலை சந்திக்கும் பெண்களுக்கு புதிய திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

“ என்டே கூடு “

My shelter அல்லது என் தங்குமிடம் எனப்படும் இத்திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களில் பெண்கள் இரவு நேரங்களில் தங்க இடவசதி ஏற்படுத்தி உள்ளனர். ஒரே நேரத்தில் 50 பேர் தங்கும் விதத்தில் அமைந்துள்ள இவ்விடத்தில் படுக்கைகள், கழிவறைகள், சமையலறை, இலவச உணவு, டிவி, ஏ.சி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

பெண்கள் தங்கும் இப்பகுதிக்கு பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை பெண்கள் மற்றும் 12 வயது வரையிலான குழந்தைகள் இலவசமாகவும், பாதுகாப்பாகவும் தங்கலாம்.

என்டே கூடு திட்டம் கேரள மாநிலத்தின் சமூகநீதி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரம் மற்றும் சமூகநீதி துறையின் அமைச்சர் கே.கே.ஷைலஜா நவம்பர் 8-ம் தேதி தாம்பனூர் பேருந்து நிலையத்தில் இதைத் தொடங்கி வைத்தார். பிற பகுதிகளிலும் செயல்படுத்த உள்ளனர்.

தாம்பனூர் பேருந்து நிலையத்தில் 8-வது மாடியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பும் இருக்கும் என கூறியுள்ளனர்.

என்டே கூடு திட்டம் பெண்களின் பாதுகாப்பிற்கானது என்பதால் நிச்சயம் பயனுள்ளத் திட்டமாகக் கருதப்படுகிறது. பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பாதுகாப்பு என்பது இன்றைய இந்தியாவில் அவசியமான ஒன்றாகி விட்டது.

ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close