தொழிலாளர் நிதி நன்மையென EPFO பெயரில் போலியான இணையதளம்

பரவிய செய்தி
1990 மற்றும் 2019-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இந்தியாவின் EPFO ஆல் 80,000 வைரயிலான நிதி நன்மைகளை பெற உரிமை உண்டு. இத்தகைய நன்மைகளை பெற்றுக் கொள்ள உரிமை உள்ளவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இருக்கிறதா என்று பாருங்கள் : https://socialdraw.top/epf
மதிப்பீடு
விளக்கம்
1990 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 80,000 ரூபாய் உறுதி அளிப்பதாக இந்திய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO-Employees Provident Fund Organisation) பெயரில் இணையதள லிங்க் ஒன்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர்கள் நிதி நன்மைகளை பெறுவதற்கான தளம் என EPFO பெயரில் உலாவும் லிங்க் ஆனது https://socialdraw.top/epf என இருக்கிறது. அதிகாரப்பூர்வ இந்திய அரசின் இணையதளங்களின் டொமைன் பெயர் .gov.in என்றே முடிவடையும். இதில், அவ்வாறு இல்லை. இதனை வைத்து அரசின் அதிகாரப்பூர்வ தளங்களை கண்டறியலாம்.
Beware of FAKE OFFERS by Websites/Telecalls/SMS/email/Social Media, ASKING TO DEPOSIT MONEY into any Bank Account towards Claim Settlement/Advance/Higher Pension/ or any other service provided by #EPFO.#Fraud #FakeCalls #Lottery pic.twitter.com/ekuvhcyJsq
— EPFO (@socialepfo) October 29, 2019
இந்நிலையில், EPFO பெயரில் போலியான இணையதளம் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக EPFO உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தப்பட்ட இணையதளத்தின் விவரங்கள், புகைப்படங்களை பதிவிட்டு எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்.
அதிகாரப்பூர்வ EPFO ஆல் போலியான தளம் கண்டறியப்பட்டதால் தற்பொழுது https://socialdraw.top/epf என்ற இணையதளத்திற்கு செல்லும் பொழுது பாதுகாப்பு எச்சரிக்கை குறித்த தகவல் வருகிறது.
இவ்வாறு பரவி வரும் போலியான தளங்களை போன்று, உங்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்பட மாட்டாது என EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலியான இணையதளங்களில் கேட்கப்படும் விவரங்களை அளித்தால், அது தனிநபர் பாதுகாப்பிற்கே ஆபத்தாகி போய்விடக்கூடும்.
இதுபோல், பரிசுகள் அல்லது பணம் அளிப்பதாக லிங்க் உடன் பல குறுஞ்செய்திகள் பரவி வருகின்றன. அவற்றில் நுழைந்து உங்களின் தனிப்பட்ட விவரங்களை அளித்தால் வங்கி கணக்கில் இருந்து பணமோ அல்லது உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என்பதை நினைவில் வையுங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.