கோடநாடு கொலை வழக்கில் தன்னிடம் விசாரணை நடத்த இபிஎஸ் தடை கேட்டதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
கொடநாடு கொலை வழக்குத் தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் – ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 2017 ஏப்ரல் 23 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது அங்கே இருந்த முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டதோடு, எஸ்டேட் காவலாளியான ஓம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மந்தமாக நடந்து வந்த இந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் “கோடநாடு கொலை வழக்குத் தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகக் கூறி மாலைமலர் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து மாலை மலர் செய்தியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் ஏதாவது நியூஸ்கார்டு வெளியிட்டிருக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அவர்கள் இதுகுறித்து எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என தேடியதில், கடந்த 2021-ன் போது அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரக்கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஏற்கெனவே பல்வேறு சாட்சிகளிடம் விசாரித்து வழக்கு முடிக்கப்படும் தருவாயில் அதை மீண்டும் விசாரிக்க காவல்துறை விடுக்கும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அவர் வழக்கு தொடர்ந்திருந்ததையும், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையும் அறிய முடிந்தது.
தற்போது எடப்பாடி பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கனகராஜிடம் கோவை மாநகர சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுதவிர எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
சேலம் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- எடப்பாடி தொடர்ந்த வழக்கில் 7-ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு
மேலும் படிக்க : https://t.co/Qhf2f2oLxp#eps #aiadmk #salem #MMNews #Maalaimalar pic.twitter.com/PhoOfc6LTh
— Maalai Malar தமிழ் (@maalaimalar) June 26, 2023
மேற்கொண்டு தேடுகையில், கடந்த ஜூன் 26 அன்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக மாலைமலர் செய்திகள் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சேலம் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- எடப்பாடி தொடர்ந்த வழக்கில் 7-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த ஜூன் 26 அன்று மாலை மலர் வெளியிட்ட நியூஸ்கார்டை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், கோடநாடு கொலை வழக்குத் தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக பரவி வரும் மாலைமலர் செய்தியின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.