ஸ்மிருதி இரானி வடிவில் அம்மாவை கண்டேன்.. எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

பரவிய செய்தி
ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு? டெல்லி நிர்வாக திருத்த மசோதாவால், அந்த மாநில மக்களுக்கு நல்லதே நடக்கும். அதனால்தான் வாக்களித்தோம். பாஜக கொண்டுவரும் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிக்கும் – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
இன்றைய நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன். – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
மதிப்பீடு
விளக்கம்
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 அன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், டெல்லி உயரதிகாரிகள் நியமன மசோதாவை ஒன்றிய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்தது. இதற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 8 அன்று அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக மோடி தலைமையிலான அரசு திறம்பட செயல்படாததைக் கண்டித்தும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து கடந்த இரு நாட்களாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு? பாஜக கொண்டுவரும் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிக்கும்” என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகக் கூறி புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதேபோன்று “இன்றைய நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன்.” என்று அவர் கூறியதாகவும் தந்தி டிவியின் நியூஸ் கார்டும் வைரலாகப் பரவி வருகிறது.
நாங்க அடிமைனு அடிச்சு சொல்லுறானுங்க 😁#எடப்பாடி_எனும்_அடிமை pic.twitter.com/CuXBgCmzUY
— Galadriel (@Devar_Army) August 8, 2023
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், அவர்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவது போன்று எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் பரவி வரும் புதியதலைமுறை நியூஸ் கார்டில், ஆகஸ்ட் ௦8, காலை 10 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்தில் “தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை விடுவித்தது இலங்கை” என்ற தலைப்பில் தான் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.
#BREAKING | தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை விடுவித்தது இலங்கை#Fishermen | #SrilankanNavy pic.twitter.com/slBt0zHeVH
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 8, 2023
அதே போன்று தந்தி டிவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், அவர்களும் சமூக ஊடகங்களில் பரவி வருவது போன்று எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் பரவி வரும் செய்திகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஏதேனும் செய்தி வெளியிட்டிருக்கிறாரா என அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், இறுதியாக ஆகஸ்ட் 6 அன்று ராஜீவ் காந்தி மருத்துவமனை குறித்த அவருடைய பதிவையையே காண முடிந்தது. இது தவிர எம்பி ஸ்மிருதி இரானி குறித்தோ, டெல்லி நிர்வாக மசோதா குறித்தோ அவர் எந்த இடத்திலும் இவ்வாறு பேசவோ, அறிக்கை வெளியிடவோ இல்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், அன்புக் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு…
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 6, 2023
எனவே எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் புதியதலைமுறை மற்றும் தந்திடிவின் இரண்டு நியூஸ் கார்டுகளும் எடிட் செய்யப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.முடிவு:
நம் தேடலில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்தோ, டெல்லி நிர்வாக மசோதா குறித்தோ எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவி வரும் புதியதலைமுறை மற்றும் தந்தி டிவியின் நியூஸ்கார்டுகள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.