எரித்ரியாவில் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்ய சட்டமா ?

பரவிய செய்தி
ஆண்கள் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். எரித்ரியா நாட்டில் விசித்திர சட்டம்.
மதிப்பீடு
விளக்கம்
செங்கடல் அருகே அமைந்துள்ள வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியாவில் உள்ள ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக தமிழ் செய்தித்தாளில் வெளியான பகுதியை காண நேரிட்டது. அதையடுத்து, தமிழில் வெளியான செய்திகள் குறித்து ஆராய்ந்து பார்த்த பொழுது 2018 ஜனவரி மாதம் பெரும்பாலான முன்னணி செய்தி இணையதளங்களில் இச்செய்தி வெளியாகி இருக்கிறது.
எரித்ரியா நாட்டு ஆண்கள் 2 பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் என செய்திகளில் வெளியாகியது, ” அந்நாட்டில் அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் அங்கு ஆண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அதேநேரத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளது. பல பெண்கள் திருமணமாகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் எரித்ரியா நாட்டில் ஆண்கள் அனைவரும் 2 திருமணம் கட்டாயம் செய்ய வேண்டும், அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக ” கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
எரித்ரியா நாட்டின் புதிய சட்டம் குறித்து தேடிய பொழுது, 2016-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி பிபிசி செய்தியில் ” The polygamy hoax that spread from Iraq to Eritrea ” என்ற தலைப்பில் பலதார திருமணம் எனும் வதந்தி ஈராக்கில் இருந்து எரித்ரியா நாடு வரை பரவி உள்ளதாக வெளியான கட்டுரை கிடைத்தது.
” எரித்ரியாவில் உள்ள ஆண்கள் குறைந்தது இரண்டு பெண்களை திருமணம் செய்ய சட்டப்படி கடமைப்பட்டு உள்ளார்கள் என்ற தவறான வதந்தி இந்த வாரத்தில் வைரலாகியது. ஆனால், இது ஒரு வதந்தி. இது இன்றுவரை குறைந்தது நான்கு நாடுகளைத் தாக்கியுள்ளது. தற்பொழுது இக்கதையை நேரடியாக எதிர்கொள்வதில் எரித்ரிய அரசாங்கம் போராடி வருகிறது, அது தொடர்பாக வைரலாகும் ஆவணத்தையும் போலியானது என நிராகரித்ததோடு கிழக்கி ஆப்ரிக்க தேசத்தில் பல திருமணங்கள் செய்வது சட்டவிரோதமானது என்பதையும் விளக்கி உள்ளது ” என வெளியாகி இருக்கிறது.
எரித்ரியா ஆண்கள் 2 பெண்களை திருமணம் செய்வது கட்டாயம் என பரவிய போலியான ஆவணத்தையும் வெளியிட்டு உள்ளனர். இந்த வந்ததியை உண்மை என நினைத்து பல நாடுகளில் உள்ள முன்னணி செய்தி தளங்கள் வெளியிட்டு உள்ளனர்.
2016-ம் ஆண்டிலேயே எரித்ரியா அரசாங்கம், தங்கள் நாட்டில் ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என சட்டம் இயற்றியதாக பரவிய வரும் வதந்திக்கு மறுப்பு தெரிவித்து பிபிசி-க்கு விளக்கம் அளித்து உள்ளது. ஆனால், 2 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அந்த வதந்தி செய்தியாக வெளியாகி இருக்கிறது. மேலும், இது தொடர்ந்து வைரலாகிக் கொண்டே இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில் இருந்து, எரித்ரியா நாட்டில் உள்ள ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என செய்திகள், சமூக ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் வதந்தியே. இந்த வதந்தி ஈராக் நாட்டில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவி உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.