ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் திமுகவினரை விரட்டியதாக பாஜகவினர் பரப்பும் பழைய வீடியோ !

பரவிய செய்தி

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களால் விரட்டப்படும் திமுக…

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிர் இழந்தார். எனவே அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டது. இதையடுத்து 121 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு. 83 மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டுள்ளது. 

Archive link 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் திமுக-வை விரட்டியதாக பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வீடியோ ஒன்றினை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரை தொடர்ந்து பாஜக-வை சேர்ந்த பலரும் அவ்வீடியோவை பரப்பி வருகின்றனர்.

Archive link 

அந்த வீடியோவில், ‘நீங்கள் எந்த கட்சியிலிருந்து வருகிறீர்கள்?’ என பொது மக்களில் ஒருவர் கேள்வி கேட்டதற்கு திமுக என்று பதிலளிக்கிறார். ‘நாங்கள் மதுக்கடை வேண்டாம் என ஒரு வருடமாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அப்போது எல்லாம் DMK கட்சியில் உங்கள் யாருக்கும் கண் தெரியவில்லையா?’ என பொது மக்களிலிருந்து வேறொருவர் கேள்வி கேட்கிறார். 

உண்மை என்ன ?

பரவக்கூடிய வீடியோவின் ஆரம்பத்திலேயே “எம்.பி. தேர்தலுக்காக புதியதாக லிஸ்ட் வந்து இருக்கிறது” எனக் கூறுவதைக் கேட்க முடிகிறது. அதனைத் தொடர்ந்தே அப்பகுதி மக்கள் டாஸ்மாக் வேண்டாம் என்ற தங்களின் போராட்டம் குறித்தும், அப்போராட்டத்தின் போது திமுக-வை சார்ந்தவர்கள் யாரும் வராதது குறித்தும் கூறுகின்றனர்.

மேலும், “27வது வார்டு பெண்கள் வார்டு. திமுக தான் கவுன்சிலர். நாங்கள் செய்த போராட்டத்தை கவுன்சிலர் வந்து பார்க்கவில்லை. ஆதரவும் அளிக்கவில்லை. பிறகு என்ன லட்சணத்தில் ஓட்டு கேட்க வருகிறீர்கள்?” என்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர். 

மேற்கொண்டு அவ்வீடியோ குறித்து இணையத்தில் தேடியதில், ‘அரசியல் அட்ராசிடிஸ்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் 2022, டிசம்பர் 23ம் தேதி பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. அப்பதிவில் “இப்போ எதுக்கு வந்தீங்க-னு? திமுகவினரை சரமாரியாகக் கேள்வி கேட்டு, விரட்டும் மக்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவக் கூடிய வீடியோவில் உள்ள திமுகவைச் சேர்ந்த நபர் இச்சம்பவம் குறித்துப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவ்வீடியோவின்  மூலம் அந்நபர் திமுக கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் என்பதை அறிய முடிகிறது. 

https://twitter.com/TigerIndn/status/1622690747307950080

Archive link

மேலும் அதில், “பரவக் கூடிய வீடியோ கோவை மாவட்டம், சூலூர் தொகுதி கருமத்தம்பட்டி 27வது வார்டில் நடந்தது. நான் தான் எம்.பி. தேர்தலையொட்டி புது ஓட்டர் லிஸ்ட் வந்து இருக்கிறது என அங்குள்ள மக்களைக் கேட்கச் சென்றேன். அப்போது அங்கிருந்த மக்கள் அவர்களது பிரச்சினையை என்னிடம் கூறினார்கள். அது நடந்து 5, 6 மாதங்கள் இருக்கும். ஆனால், தற்போது ஈரோடு கிழக்கில் நடந்ததை போல எடிட் செய்து பரப்பி வருகின்றனர்” எனக் கூறி இருக்கிறார்.

அப்பாஸ் கூறியதிலிருந்து பரவக் கூடிய வீடியோ கோவை மாவட்டத்தில் நடந்தது என்பதை அறிய முடிகிறது.

முடிவு : 

நம் தேடலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினரை விரட்டியதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பும்  வீடியோ கோவை மாவட்டத்தில் 2022ல் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button