அதிமுகவினர் செய்தியாளரைத் தாக்கிய வீடியோவை திமுக எனப் பொய் பரப்பும் பாஜக நாராயணன் திருப்பதி !

பரவிய செய்தி
வன்மையாக கண்டிக்கிறேன். தி மு க வின் அராஜகம் அதிகரித்து வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வெட்கக்கேடான செயல் தொடர்கிறது. சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதனை வெளிப்படுத்திய நியூஸ் தமிழ் செய்தியாளர்களை திமுகவினர் கடுமையாகத் தாக்கியதாகவும் நியூஸ் கார்டு ஒன்றை பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி முதற்கொண்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி கட்சியினர் செய்யும் முறைகேடுகளை வெளிப்படுத்திய நியூஸ் தமிழ் செய்தியாளர்கள் மீது திமுக வினரின் காட்டுமிராண்டி தாக்குதல். நம்பர் 1 முதல்வர் திருவாரூரில் ஹிட்லர் முசோலினி வழியில் நடப்பது என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறாரா…? தேர்தல் கமிஷன்? pic.twitter.com/FkAJZPkbQv
— L.PRABHAKARAN MELUR (@LPRABHAKARAN) February 22, 2023
அந்த நியூஸ் கார்டில், “செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்.. ஈரோடு கிழக்கில் செய்தி சேகரிக்கச் சென்ற தலைமைச் செய்தியாளர் ராஜேஷ் மீது தாக்குதல்; ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த கேமரா மேன் கருப்பையாவும் தாக்கப்பட்டார்.” என உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நியுஸ் தமிழ் தலைமை செய்தியாளர் ராஜேஷ் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்.. pic.twitter.com/vXNZ8IPFXs
— புதிய பாரதம் (@new_bharatham) February 22, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய நியூஸ் கார்டு குறித்து ‘நியூஸ் தமிழ்’ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். அவர்களது டிவிட்டர் பக்கத்தில் 2023, பிப்ரவரி 22ம் தேதி அந்த நியூஸ் கார்டு பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் எனக் குறிப்பிடப்படவில்லை.
நியூஸ் தமிழ் செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்.. #Newstamil24x7 #Newstamiltv24x7 #newstamil #tamilnews #Newstamiltv24x7live #newstamilnews #erodebyeelection pic.twitter.com/tY792YuYXe
— NewsTamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) February 22, 2023
மேற்கொண்டு தேடியதில், நியூஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் ‘பத்து, பதினைந்து பேர் சேர்ந்து குத்தினர்.. செய்திக் குழு மீது கொடூர தாக்குதல்.!’ என்ற தலைப்பில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
அச்செய்தியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உதவியாளர் சபரீசன் தலைமையில் வாக்காளர் அடையாள அட்டையைச் சரிபார்த்து ஓட்டுக்கு 500 ரூபாய் பணம் விநியோகம் செய்து கொண்டிருந்த போது, அதனைப் படம் பிடித்து செய்தியாக்கிய செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா மீது சபரீசன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர் என உள்ளது.
செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வீடியோவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட நியூஸ் தமிழ் செய்தியாளர் ரவிக்குமார் என்பவரை ‘யூடர்னில்’ இருந்து தொடர்பு கொண்டு பேசிய போது, “தேர்தல் தொடர்பான பணப் பட்டுவாடா போன்ற செய்திகளை வெளிக்கொணரச் சிறப்புச் செய்தியாளராக சென்னையிலிருந்து செய்தியாளர் ராஜேஷை அனுப்பி வைத்தார்கள். சில நாட்களுக்கு முன்னர் கூட ஓட்டுக்குப் பணம் கொடுத்தது, கொலுசு கொடுத்தது எனப் பல செய்திகளை வெளிக்கொண்டுவந்தார்.
அவருக்கு அதிமுக கட்சியினர் வீரப்பன் சத்திரம், 16 சாலை, அசோகபுரம் சாலையிலிருந்த ஒரு வீட்டில் பணப் பட்டுவாடா செய்வதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளருடன் சென்று செய்தியாகியுள்ளார். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உதவியாளர் சபரீசன் (சபேசன்) செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.
ஆனால், பெண்கள் கழிவறைக்குச் செல்லும் போது வீடியோ எடுத்ததால் நாங்கள் தாக்கினோம் என ஒரு பொய்யை அதிமுகவினர் பரப்பி வருகின்றனர்” எனக் கூறினார்.
இதிலிருந்து அதிமுகவினர் செய்தியாளரைத் தாக்கிய நியூஸ் கார்டினை, திமுகவினர் தாக்கியதாக தவறான செய்தியைப் பரப்பி வருவதை அறிய முடிகிறது.
திமுகவினர் :
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 21ம் தேதி, ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் கை சின்னம் சார்பில் பொது மக்களை அடைத்து வைத்து, அதற்குப் பணம் அளிப்பதாக இதே செய்தியாளர் செய்தி வெளியிட்டிருந்தார். அப்போது அங்கிருந்த திமுகவினர் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை அங்கிருந்து வெளியேற்றி பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ தற்போது நியூஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், நியூஸ் தமிழ் செய்தியாளரை அதிமுகவினர் தாக்கிய நியூஸ் கார்டினை, திமுகவினர் தாக்கியதாக ஒரு தவறான செய்தியை பாஜகவினர் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.