Fact Checkஅரசியல்தமிழ்நாடு

‘பிரச்சாரத்திற்கு வராதீர்கள்’ என பாஜகவிடம் அதிமுக கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி

பிரச்சாரத்திற்கு வராதீர்கள்.. ப்ளீஸ்! பாஜகவிடம் கெஞ்சும் அதிமுக! ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தங்களோடு வர வேண்டாமென பாஜகவினருக்கு செங்கோட்டையன் வேண்டுகோள்; பிரச்சார விளம்பரங்களில் பிரதமர் மோடி, அண்ணாமலை புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாமெனவும் அதிமுகவினருக்கு வாய்மொழி உத்தரவு. பாஜக மீதான பொதுமக்கள், சிறுபான்மையினரின் அதிருப்தியே அதிமுகவின் இந்த முடிவுக்கு காரணம் எனவும் தகவல்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிர் இழந்தார். எனவே, அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

Advertisement

இந்த இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து, அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு என்பவரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. 

Archive link 

இந்நிலையில், பாஜகவைப் பிரச்சாரத்திற்கு வரவேண்டாமென அதிமுக கெஞ்சுவதாகத் ‘தினமலர்’ நியூஸ் கார்டு ஒன்றை திமுகவை சேர்ந்தவர்களும் வலதுசாரிகள் சிலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Archive link 

அந்த நியூஸ் கார்டில், தேர்தல் பிரச்சாரத்திற்கு தங்களுடன் பாஜகவினர் வர வேண்டாம் என்றும், பிரச்சார விளம்பரங்களில் பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன ? 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்துப் பரவும் ‘தினமலர்’ நியூஸ் கார்டில் எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை. மேலும், பரவும் நியூஸ் கார்டின் வடிவமைப்பு தினமலர் நியூஸ் கார்டின் வடிவமைப்பிலிருந்து வெகுவாக மாறுபட்டுள்ளதை காண முடிகிறது. இது குறித்து அவர்களது சமூக வலைத்தளங்களில் தேடினோம். அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் பதிவிடப்படவில்லை. 

பிப்ரவரி 1ம் தேதி அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தில் பிரதமர் மோடி உட்பட எந்த ஒரு பாஜக தலைவரின் படமும் இடம்பெறவில்லை’ என ‘சன் நியூஸ்’ புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. 

 

அதே போல், பாஜகவுடனான கூட்டணி உறுதி செய்வதற்கு முன்பாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர் சந்திப்பில் பாஜக குறித்து சில கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

அவர் கூறியதாவது, “பாஜக வட மாநிலங்களில் எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது. பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சிகளை எப்படி எல்லாம் பாஜக பிடித்தது என்பது உங்களுக்கும் தெரியும்… மக்களுக்கும் தெரியும்… எங்களுக்கும் தெரியும்… எனவே நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்” என்றார். 

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது இருக்கிறதா இல்லையா? எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, “உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனியாகத் தான் நின்றது. இந்த கேள்விக்கே பொருளில்லை. மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். இதன் காரணமாக பாஜக எங்களுடன் பணியாற்ற விரும்பலாம். காத்திருந்து பாருங்கள்” எனப் பதிலளித்திருந்தார்.

ஆனால், கூட்டணி உறுதி செய்த பிறகு பிப்ரவரி 9ம் தேதி நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடி புகைப்படங்கள் இருப்பதைக் காண முடிகிறது.

மேற்கொண்டு அதிமுக மற்றும் பாஜக தலைமைகள் கூட்டணி குறித்து தற்போது என்ன கூறியுள்ளனர் என்பது பற்றித் தேடினோம். நேற்றைய தினம் (பிப்.10) அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தொடருமா எனக் கேட்கப்பட்டது. “அது ஏன் இப்போது தேவை? இப்போது நாங்கள் கூட்டணியில் தான் இருக்கிறோம். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட பாஜகவினர் கலந்து கொண்டார்கள். இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அந்தத்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமையும். ஆகவே, எங்களின் கூட்டணி தொடரும்” எனக் கூறி இருக்கிறார்.

அதற்கு முன்னதாக, பிப்ரவரி 9ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாலவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. நான் இலங்கை செல்வதால் சி.பி.ராதாகிருஷ்ணன் அக்கூட்டத்தில் கலந்து கொள்வார்.

நாங்கள் அனைவரும் உயிரைக் கொடுத்துப் பாடுபட்டு அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேலை செய்வோம். கட்சித் தலைவர்கள் எல்லோருமே வருவார்கள் களத்திலே இறங்குவார்கள்.  நான் 3 நாள் இலங்கை பயணம் முடித்து வந்த பிறகு களத்தில் இறங்கி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம். அது எங்கள் கடமை” எனக் கூறியுள்ளார். அண்ணாமலை கூறியதை போல சி.பி.ராதாகிருஷ்ணன் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். 

கூட்டணி அறிவிப்பதற்கு முன்னதாக இத்தகைய மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும், கூட்டணிக்குப் பிறகு அதிமுக தலைமையில் இருப்பவர்கள் பாஜகவினர் தங்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்கு எதிராக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. 

மேலும் படிக்க : ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் திமுகவினரை விரட்டியதாக பாஜகவினர் பரப்பும் பழைய வீடியோ !

மேலும் படிக்க : காங்கிரஸ் ஆதரவால் ம.நீ.மய்யத்தில் இருந்து நிர்வாகிகள் விலகுவதாக பழைய செய்தியை பரப்பும் பாஜக செளதாமணி !

இதற்கு முன்னதாக ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பரப்பப்பட்ட போலி செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், பாஜகவை ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வர வேண்டாம் என அதிமுக தரப்பு கூறியதாகப் பரவும் தினமலர் நியூஸ் கார்டு உண்மை அல்ல. அது எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button