ஈரோடு வாக்கு சேகரிப்பில் திமுக பிரமுகர் சிறுமிக்கு பாலியல் சீண்டல் என அதிமுகவினர் பரப்பும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் சிறுமிக்கு பாலியல் சீண்டல். திமுக பிரமுகர் கைது
மதிப்பீடு
விளக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான இறுதி பிரச்சாரங்கள் இன்றுடன் முடிவடைகின்றன. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் போட்டிப் போட்டுக் கொண்டு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் வாக்காளர்களுக்கு வாரி வழங்கி வரும் வீடியோக்கள் மற்றும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த திமுக பிரமுகர் கைது என தந்தி டிவி செய்தியின் கார்டு ஒன்றை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் செய்தி குறித்து தேடிய போது, அவ்வாறான சம்பவம் நிகழ்ந்ததாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. மேலும், தந்தி டிவி சேனலிலும் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
ஆகையால், தந்தி டிவி யூடியூப் சேனலில் “திமுக பிரமுகர் கைது” என்ற கீவார்த்தைகளை கொண்டு தேடிய போது, “ஆர்.டி.ஒ. அதிகாரி எனக் கூறி வாகனங்களை மறித்து வசூல்வேட்டை.. திமுக பிரமுகர் கைது ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் அதே நபர் இருப்பதைக் காண முடிந்தது.
2021 மார்ச் 9ம் தேதி வெளியான தந்தி டிவி செய்தியில், ” ஆர்டிஓ அதிகாரி என கூறி வாகனங்களை மறித்து வசூல் வேட்டை… தேனியை சேர்ந்த திமுக பிரமுகர் கைது ” எனக் கூறப்பட்டு உள்ளது. மேற்காணும் வீடியோ கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : ஈரோடு கிழக்கில் ஓட்டுக்காக கொடுத்த குக்கர் வெடித்ததாக தவறாகப் பரப்பப்படும் கர்நாடகா விபத்து !
மேலும் படிக்க : அதிமுகவினர் செய்தியாளரைத் தாக்கிய வீடியோவை திமுக எனப் பொய் பரப்பும் பாஜக நாராயணன் திருப்பதி !
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பல்வேறு பொய்ச் செய்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அதுகுறித்து யூடர்ன் வெளியிட்ட மற்ற கட்டுரைகளையும் படிக்கவும்.
மேலும் படிக்க : ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதா ?
முடிவு :
நம் தேடலில், ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது எனப் பரப்பப்படும் செய்தி கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.