கொடிவேரி அணை பூங்காவில் இரட்டை வசூலால் ஏற்பட்ட தகராறு எனப் பரப்பப்படும் 2020ல் எடுத்த வீடியோ !

பரவிய செய்தி
கொடிவேரி அணை பூங்காவில் இரட்டை வசூலில் ஈடுபட்ட நபர்களை எதிர்த்து கேள்வி கேட்ட சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல். இதில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் பங்கு செல்வதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என பொது மக்கள் புகார்..
மதிப்பீடு
விளக்கம்
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளில் ஒன்று கொடிவேரி அணை. இது பவானிசாகர் அணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த கொடிவேரி அணை பூங்காவில் இரட்டை வசூல்முறை நடைபெறுவதாகவும், அதற்கு காரணம் திமுக அரசியல் பிரமுகர்கள் தான் என்றும் கூறி வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் இந்த வீடியோவில் தம்பதியினரை, அணைக்கட்டில் வசூலில் ஈடுபட்டவர்கள் சண்டையிட்டு தாக்கிக்கொள்வதைப் போலவும் இடம்பெற்று இருக்கிறது.
கொடிவேரி அணை பூங்காவில் இரட்டை வசூலில் ஈடுபட்ட நபர்களை எதிர்த்து கேள்வி கேட்ட சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல். இதில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் பங்கு செல்வதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என பொது மக்கள் புகார்..
#திருட்டுதிமுக pic.twitter.com/MIk9suLiGf— Savukku Shankar Army (@Mahi1987Mass) September 29, 2023
கொடிவேரி அணை பூங்காவில் இரட்டை வசூலில் ஈடுபட்ட நபர்களை எதிர்த்து கேள்வி கேட்ட சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல். இதில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் பங்கு செல்வதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என பொது மக்கள் புகார்.. pic.twitter.com/4nMiWNsgml
— Maha Simha (@maha_simha) September 29, 2023
உண்மை என்ன ?
பரவிவரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோவில் உள்ள தாக்குதல் காட்சிகள் ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் தான் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சமீபத்தில் இல்லை, 2020ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. 2020 பிப்ரவரி 15ம் தேதி ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் இதே தகவலுடன் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.
இதுகுறித்து செய்திகள் ஏதாவது வெளியாகி இருக்கிறதா என்பது குறித்தும் தேடுகையில், “கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில், இரட்டை வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரி, கலெக்டர் கதிரவனிடம் , மக்கள் நீதி மய்யம் சார்பில், நேற்று மனு வழங்கினர். ஈரோடு வடகிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில், செயலாளர் சிவகுமார் தலைமையில் மனு வழங்கி கூறியதாவது: கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகளின் வாகனத்துக்கு, இரட்டை வரி வசூலிக்கின்றனர். இதை ரத்து செய்ய வேண்டும்.
அங்கு நடக்கும் குற்ற நடவடிக்கையை தடுக்க, அணை பகுதியில் அமைந்துள்ள புறக்காவலர் நிலையத்தில், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத கண்காணிப்பு கோபுரத்தை, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும். ஆற்று மணலில் மூழ்கி கிடக்கும் ஓய்வறை, நிழற்கூடத்தை சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும்.” என்று 2020 பிப்ரவரி 18 அன்று தினமலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.
இதேபோன்று செய்திபுனல் செய்தியிலும், “தனியாக வந்த தம்பதியை அடித்து நொறுக்கும் கும்பல், பதற வைக்கும் வீடியோ காட்சி” என்ற தலைப்புடன் 2020ல் செய்தி வெளியிடப்பட்டிருந்தன. இதில் பரவி வரும் வீடியோ காட்சிகளில் உள்ள புகைப்படங்களும் இடம்பெற்றிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் ஸ்லீப்பர் பஸ், குண்டு துளைக்காத பேருந்து எனத் தவறாகப் பரவும் பழைய படங்கள் !
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் கொடிவேரியில் இரட்டை வசூல்முறையால் நடந்த தகராறு என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் வீடியோ கடந்த 2020ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.