எத்தியோபியாவில் 12 வயது பெண்ணை சிங்கங்கள் காப்பாற்றியதா ?

பரவிய செய்தி
சில விலங்குகள் மனிதர்களை விட உயர்வானவை ! 2005 ஆம் ஆண்டில், 12 வயது பெண்ணை கடத்தி திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய போது அங்கு வந்த மூன்று சிங்கங்கள் கடத்தியவர்களை விரட்டி துரத்தி விட்டு, அப்பெண்ணை எத்தியோப்பியா காவல்துறை காப்பாற்ற வரும் வரை பாதுகாத்து உள்ளன.
மதிப்பீடு
விளக்கம்
எத்தியோப்பியா நாட்டில் 12 வயது பெண்ணை கடத்தியவர்களிடம் இருந்து மூன்று சிங்கங்கள் காப்பாற்றியதோடு, அந்த பெண்ணிற்கு எந்தவித தீங்கும் செய்யாமல் பாதுகாத்து இருந்ததாக 2005 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் சில தினங்களாக வைரல் ஆகி வருகிறது.
2005 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் தென் கிழக்கு எத்தியோப்பியா பகுதியில் வசித்து வந்த 12 வயது பெண் தன் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நான்கு நபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அந்த நான்கு பேரை காவல்துறை கைது செய்தது. அப்பெண்ணை தேடும் பணியையும் மேற்கொண்டது.
இந்நிகழ்வு குறித்து Sergeant Wondmu Wedaj , “நாங்கள் கண்டுபிடிக்கும் போது பாதுகாப்பாக உடன் சிங்கங்கள் இருந்தன. பின்னர் இயல்பாக அப்பெண்ணை விட்டு நகர்ந்து சென்று காட்டிற்குள் சென்று விட்டன ” எனக் கூறியதாக பிபிசி உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி உள்ளது.
சிங்கங்கள் பெண்ணை கடத்தியவர்களை துரத்தி விரட்டிய பிறகு அப்பெண்ணுடன் இருந்து பாதுகாப்பு அளித்தது ஆச்சரியமான நிகழ்வாக இருப்பதாகவே காவல்துறையினர், அப்பகுதி மக்கள் தெரிவித்து இருந்தனர்.
” தன்னை கடத்தியவர்கள் மூலம் தாம் தாக்கப்பட்டாலும், சிங்கங்கள் மூலம் தனக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என அங்கு நடந்த நிகழ்வு பற்றி காவல்துறையிடம் அப்பெண் தெரிவித்து இருந்தார் ” .
எத்தியோப்பியா வன வல்லுநர் ஸ்டுவர்ட் வில்லியம்ஸ் , ” அப்பெண்ணின் அழுகை சிங்கத்தின் குட்டியுடைய ஒலியை போன்று சிங்கங்கள் நினைத்து இருக்கலாம் ” என இச்சம்பவம் பற்றி தன் கருத்தை தெரிவித்து இருந்தார்.
எத்தியோப்பியாவில் 12 வயது பெண் கடத்தப்பட்டு சிங்கத்தினால் கொல்லப்படாமல் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் உண்மையில் நடந்தவையே. எனினும், சிங்கங்கள் எந்த நோக்கத்தில் உடன் இருந்தன என்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை.
விலங்குகளின் செயல்கள் சில நேரங்களில் அறிய முடியாதவையாக இருக்கும். விலங்குகள் பற்றிய பல வீடியோக்களில் தன் வேட்டையின் போது மற்ற விலங்கிற்கு அருகில் சென்று பின் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வேட்டையாடாமல் அமைதியாய் செல்லும் சிங்கத்தின் செயலை பார்த்ததுண்டு.
எத்தியோப்பியா பெண் சம்பவத்திலும் அப்படி ஒரு புரிந்து கொள்ள முடியாத நிகழ்வே அரங்கேறியுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் மிகவும் தொலைதூர கிராமங்களில் பெண்களை கடத்தி செல்வது அதிகரித்து வருகிறது. அங்கு நடக்கும் 70 சதவீத திருமணங்கள் கடத்திச் சென்று நிகழ்பவை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.