பாழடைந்து கிடந்த ஐரோப்பியத் தேவாலயங்களில் ராதே கிருஷ்ணா பிரசங்கம் நடத்துவதாகப் பரவும் இசை நிகழ்ச்சி வீடியோ !

பரவிய செய்தி
பாழடைந்து கிடந்த ஐரோப்பிய சர்ச்களில் தற்போது தினமும் இரண்டு வேளை ராதே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம் & பிரசங்கம் உட்பட ஐரோப்பியர்களால் செய்யப்படுகிறது !!!
மதிப்பீடு
விளக்கம்
பாழடைந்த ஐரோப்பியத் தேவாலயங்களில் தற்போது தினமும் இரண்டு வேளை ராதே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம் மற்றும் பிரசங்கம் ஐரோப்பியர்களால் செய்யப்படுகிறது என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில் பல வெளிநாட்டினர் கூடியுள்ள அரங்கில் ஒருவர் ‘ராதே கோவிந்தா’ என்ற பாடலை பாடுகிறார்.
🙏💕 பாழடைந்து கிடந்த ஐரோப்பிய சர்ச்களில் தற்போது தினமும் இரண்டு வேளை ராதே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம் & பிரசங்கம் உட்பட ஐரோப்பியர்களால் செய்யப்படுகிறது !!! pic.twitter.com/6eX5kGeVaV
— MPR (@mprooty) June 26, 2023
உண்மை என்ன ?
ஐரோப்பியத் தேவாலயம் பாழடைந்து இருந்ததாகவும், அதில் தினமும் இரண்டு வேளை ராதை கீர்த்தனை செய்யப்படுவதாகவும் பரவும் வீடியோவில், மேடைக்கு அருகில் உள்ள ஒரு LED திரையில் ‘RADHE GOVINDA (BHAJA MANA)’ என்றுள்ளதைக் காண முடிந்தது.
இதனைக் கொண்டு யூடியூபில் ‘Radhe govinda song’ என்று தேடியதில், அதன் முழு வீடியோ ‘Radhika Das’ என்னும் பக்கத்தில் கிடைத்தது. ‘Radhe Govinda – Radhika Das – LIVE at Union Chapel, London’ என்ற தலைப்பிலிருந்து அது லண்டனில் உள்ள ‘Union Chapel’ எனும் இடத்தில் நடைபெற்றது என்பதை உறுதி செய்ய முடிந்தது.
மேலும், Union Chapel இடம் குறித்து இணையத்தில் தேடியதில், அது தேவாலயம் மட்டுமின்றி அதில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடிய பொது அரங்கமும் இருப்பதை அவர்களது இணையதளத்தின் மூலம் அறிய முடிந்தது. அந்த அரங்கு வாடகைக்கும் விடப்படுகிறது. அதன்படி பல்வேறு இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இதற்கு முன்னர் அங்கு நடந்துள்ளது.
உதாரணமாக, 2018ம் ஆண்டு ‘Fanna-Fi-Allah’ என்னும் இசைக் குழுவினர் இஸ்லாமியப் பாடல்களையும், சூஃபி பாடல்களையும் பாடியுள்ளனர். அக்குழுவினரது நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 11ம் தேதியும் நடைபெற உள்ளதாக Union Chapel இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக ராதே கோவிந்தா பாடலை பாடியவரான ‘ராதிகா தாஸ்’ குறித்துத் தேடியதில், அவர் இது போன்று பல்வேறு இடங்களில் இந்து மத பாடல்களைப் பாடி வருவதைக் காண முடிந்தது. அப்படி Union Chapel-ல் கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவைதான் தற்போது பரப்பி வருகின்றனர்.
இவற்றிலிருந்து பாழடைந்த தேவாலயத்தில் தினமும் ராதே கீர்த்தனை நடைபெறுவதாகப் பரவும் வீடியோ ஒரு இசை நிகழ்ச்சி என்பதையும், இதேபோன்று இஸ்லாமிய கலைக்குழுவினரும் அந்த அரங்கில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர் என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், பாழடைந்து கிடந்த ஐரோப்பிய சர்ச்களில் தற்போது தினமும் இரண்டு வேளை ராதே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம் பாடப்படுவதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது ஒரு இசைக்கலை நிகழ்ச்சி. அந்த அரங்கில் வாடகையைச் செலுத்தி நிகழ்ச்சி நடத்திக் கொள்ளலாம் என்பதை அறிய முடிகிறது.