This article is from Mar 25, 2020

ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் பெரும் தொற்று ஏற்படுவதாக பரவும் தகவல் உண்மையா ?

பரவிய செய்தி

ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் ஏற்படும் பெரும் தொற்று ஏற்படுகிறது. 1720-ல் பிளேக், 1820-ல் காலரா , 1920-ல் ஸ்பானிஷ் ஃப்ளு, 2020-ல் கொரோனா வைரஸ் பாதிப்பு.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

நோவல் கொரோனா வைரஸ் உலகளாவிய பெரும் தொற்றாக உருவெடுத்த பிறகு கடந்த கால வரலாற்றில் பெரும் தொற்றாக உருவெடுத்த நோய்களின் பெயரும், பரவிய ஆண்டுகளும்  வரிசைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் ஒருமுறை பெரும் தொற்று ஏற்பட்டு வருவதாக முகநூல், வாட்ஸ் அப், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படுகிறது.

1720-ல் பிளேக், 1820-ல் காலரா, 1920-ல் ஸ்பானிஷ் ஃப்ளு, 2020-ல் கொரோனா வைரஸ் ஆகியவை வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அத்தகைய பெரும் நோய்கள் பரவிய ஆண்டு மற்றும் தாக்கம் குறித்தும், விடுபட்டுள்ள நோய்கள் குறித்தும் ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.

பிளேக் : 

” பிளாக் டெத் ” என அழைக்கப்படும் ” பிளேக்” 1720-ம் ஆண்டில் பரவியதாக குறிப்பிட்டு உள்ளனர். எனினும், முதன் முதலில் பிளேக் நோயின் தாக்குதல் பரவிய செய்திகளில் கூறுவது போன்று 400 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல.

US National Human Genome Research Institute வெளியிட்ட அறிக்கையின்படி, ஐரோப்பாவில் 1347 முதல் 1351 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிளேக் நோய் முதலில் பரவியதாக குறிப்பிட்டு உள்ளனர். அதேபோல், பிளேக் நோயானது பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது, வைரஸ் மூலம் அல்ல என்பதை உலக சுகாதார மையத்தின் தகவலின் மூலம் அறியலாம்.

காலரா : 

காலரா எனும் பெரும் தொற்று 1817 முதல் 1923 வரையிலான காலக்கட்டத்தில் 6 முறை ஏற்பட்டு உள்ளது. காலரா தொற்றும் வைரசால் உண்டாவது இல்லை. பாக்டீரியா மூலம் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, 1961-ம் ஆண்டில் இருந்து 7-வது மற்றும் தொடர்ச்சியான காலரா பெரும் தொற்று ஏற்பட்டு உள்ளதாக உலக சுகாதார மையத்தின் தகவலில் இடம்பெற்று இருக்கிறது.

ஸ்பானிஷ் ஃப்ளு : 

அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இணையதளத்தில் அளிக்கப்பட்ட தகவலில், ஸ்பானிஷ் ஃப்ளு எனும் பெரும் தொற்று 1918-ம் ஆண்டு முதல் பரவியதாக கூறி உள்ளார்கள். பரவிய செய்திகளில் குறிப்பிட்ட ஆண்டிற்கு முன்பாகவே ஸ்பானிஷ் ஃப்ளு தொற்று தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா வைரஸ் : 

கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நோவல் கொரோனா வைரஸ் மூலம் உண்டான பாதிப்பு மட்டும் பெரிதாய் பேசப்படுகிறது. ஏனெனில், அதன் பரவும் வேகம் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் மட்டுமே. கொரோனா வைரஸ் குடும்பத்தில் சார்ஸ், மார்ஸ் உள்ளிட்ட வைரஸ்களும் பரவி இருந்துள்ளன.

ஒரு சில ஆண்டுகள் முன்ன, பின்ன இருக்கலாம், அதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளில் பெரும் தொற்றால் உயிர் பலிகள் இல்லை என மறுக்க முடியாது என கேள்விகள் எழலாம். ஆனால், சரியாக ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இப்படி நடக்கிறது எனக் கூறுவது சரியானது அல்ல என்பதை விளக்கவே இக்கட்டுரை. ஏனெனில், கடந்த நூறு ஆண்டுகளில் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எபோலா, சார்ஸ், எயிட்ஸ் உள்ளிட்ட பல முக்கிய பெரும் தொற்று குறித்து பட்டியலில் குறிப்பிட மறந்து விட்டனர்.

ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சொல்லி வைத்தது போன்று பெரும் தொற்று ஏற்படுவதாக கூறும் பதிவின் தகவலை சுகாதார வல்லுநர்கள் மறுக்கின்றனர். நோவல் கொரோனா வைரசால் ஏற்பட்ட பெரும் தொற்று கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது, ஏனெனில் அவை புதிய தொற்றாகும்.

கடந்த நூற்றாண்டுகளில் பெரும் தொற்றாக பரவி மக்களின் உயிரை பறித்த பெரும் நோய்கள் குறித்து பேசுவது தவறல்ல. ஆனால், தற்போது ஏற்பட்டு இருக்கும் சூழ்நிலையில் 100 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இப்படி நடப்பதாக தவறான தகவல்களை பரப்புவது முறையானது அல்ல. உலக அளவில் பெரும் தொற்றுகள் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் இருந்து எப்படி தற்காத்து கொள்வதை மட்டுமே சிந்திக்க வேண்டிய நேரமிது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader