கர்நாடக தேர்தலில் பாஜகவிற்கு வாக்கு விழவில்லை என்று பாஜக நபர் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தாரா ?

பரவிய செய்தி
தங்களுடைய பகுதியில் பாஜகவுக்கு வாக்கு விழவில்லை என்று தெரிந்த சங்கி வாக்களிக்கும் இயந்திரத்தை தூக்கிப்போட்டு உடைத்த காட்சி எல்லா சங்கிகளும் மனநோயாளிகளே!
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 13ம் தேதி நடந்தது. அதன் முடிவில் மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று வரும் 18-ஆம் தேதி ஆளுநர் முன்னிலையில் பதவியேற்க உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் பாஜகவிற்கு வாக்கு பதிவாகாததால் வாக்குப்பதிவு இயந்திரத்தை பாஜக ஆதரவாளர் உடைத்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அவ்வீடியோவில், வரிசையில் வரும் ஒரு நபர் வாக்குப்பதிவு கையேட்டில் கையெழுத்திடுவது போன்றும் பின்னர் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக் கருவியை (EVM Ballot Control Unit) தரையில் போட்டு உடைப்பது போன்றும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது.
தங்களுடைய பகுதியில் பாஜக வுக்கு வாக்கு விழவில்லை என்று தெரிந்த சங்கி வாக்களிக்கும் இயந்திரத்தை தூக்கிப்போட்டு
உடைத்த காட்சி
எல்லா சங்கிகளும் மனநோயாளிகளே pic.twitter.com/PclXNBGcY2— Mani Sekaran (@ManiSek32574261) May 14, 2023
👆தங்களுடைய பகுதியில் பாஜக வுக்கு வாக்கு விழவில்லை என்று தெரிந்த சங்கி வாக்களிக்கும் இயந்திரத்தை தூக்கிப்போட்டு
உடைத்த காட்சி
எல்லா சங்கிகளும் மனநோயாளிகளே!🫣😇 pic.twitter.com/Rf6wGyjAtO— Kalaiselvan (@Kalaise26158891) May 16, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், NewsFirst Kannada மற்றும் Third Eye ஊடகங்கள் கடந்த மே 12 அன்று இது தொடர்பாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
அதில் கர்நாடகாவின் சாமுண்டேஸ்வரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஹூட்டகல்லி வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டுக் கட்டுப்பாட்டுக் கருவியை (EVM Ballot Control Unit) உடைத்த நபர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல என்பதையும், சாமானிய மனிதரான அவர் வாக்குப்பதிவு செய்ய வந்த பொழுது மனநல உளைச்சலுக்கு ஆளாகி அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவரை கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தேடியதில், தி இந்து இனையதளத்தில் கடந்த மே 12 அன்று இந்த சம்பவம் தொடர்பாக கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் “இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பெயர் சிவமூர்த்தி (48) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அவர் EVM கட்டுப்பாட்டுக் கருவியை பிடுங்கி தரையில் வீசுவதற்கு முன்பு பதிவேட்டில் அமைதியாக தான் கையொப்பமிட்டுள்ளார்.
எனவே அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்று சந்தேகிக்கப்படுகிறார், ஐபிசி பிரிவு 84 இன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை துணை காவல் கண்காணிப்பாளரான (சட்டம் மற்றும் ஒழுங்கு) முத்துராஜ் கூறியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திகளை Star of Mysore ஊடகமும் தனது பக்கத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் வாக்குச் சாவடி எண் 40க்குள் நுழைந்த சிவமூர்த்தி, பதிவேட்டில் கையெழுத்திட்டு சீட்டைப் பெற்றார். அப்போது அவர் திடீரென வாக்குச் சீட்டுக் கட்டுப்பாட்டு கருவியைப் பிடித்து தரையில் ஓங்கி எறிந்தார். அவர் அதை எடுத்து மீண்டும் அடித்து நொறுக்குவதற்குள், வாக்குச்சாவடி ஊழியர்களும், ஆயுதமேந்திய துணை ராணுவ வீரர்களும் அவரைப் தடுத்து கைது செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் கன்னடா என எந்த செய்தியிலும் வாக்குச் சீட்டுக் கட்டுப்பாட்டு கருவியை சேதப்படுத்திய நபர் எந்தக் கட்சிச் சார்ந்தவர் என எங்கும் குறிப்பிடவில்லை.
மேலும் படிக்க: கர்நாடகாவில் காங்கிரசின் முஸ்லீம் வேட்பாளருக்கு போலி வாக்கு செலுத்தி வென்றதாகப் பரப்பப்படும் வதந்தி !
இதற்கு முன்பும், கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து பரவிய போலி செய்திகளை ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மைக் குறித்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து கூறியதாகப் போலி ட்வீட்டை பரப்பும் பாஜகவினர் !
முடிவு:
நம் தேடலில், கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த பாஜக நபர் எனப் பரவும் வீடியோ தவறானது. அவர் மனநிலை சரியில்லாதவர் என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர் என்றும், அவர் கட்சிச் சார்ந்தவர் என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.