This article is from Oct 16, 2020

வங்கி தேர்வில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் இடஒதுக்கீடு குறைப்பு !

பரவிய செய்தி

வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம், பயிற்சி அதிகாரிகளை தேர்வு செய்ய வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இடஒதுக்கீடு : பட்டியலின இடஒதுக்கீடு 15% என்பதற்கு பதிலாக 13%, பழங்குடியினர் ஒதுக்கீடு 7.5% என்பது 6% , இதர பிற்படுத்தப்பட்டோரு 27% வழங்கிய வேண்டிய இட ஒதுக்கீட்டை வெட்டி 21% ஆக சுருக்கியுள்ளது.

Facebook link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசாங்கம் 10% இடஒதுக்கீட்டை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அமல்படுத்துவதாக அறிவித்த போது முன்பே இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது எனக் கூறியது. ஆனால், சமீபத்தில் ” Institute of Banking Personnel Selection (IBPS) ” வெளியிட்ட வங்கிகள் தேர்விற்கான அறிவிப்பில் EWS-க்கு மட்டும் 10% முழுமையாக கொடுத்து விட்டு, ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப்  மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி ஆகிய 4 வங்கிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வில், மொத்தமுள்ள 1,417 இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 300, பட்டியலின பிரிவிற்கு 196, பழங்குடியினருக்கு 89 இடங்கள் என இடஒதுக்கீட்டு அளவை விட குறைவாக வழங்கப்பட்டு உள்ளது. இடஒதுக்கீட்டின்படி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 382, பட்டியலின பிரிவிற்கு 212, பழங்குடியினருக்கு 107 இடங்கள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அதேநேரத்தில், பொருளாதாரத்திற்கு பின்தங்கிய வகுப்பினருக்கு முழுமையாக 10% (142) இடங்கள் வழங்கப்பட்டு உள்ளன

27% வழங்க வேண்டிய இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 21%-மும், 15 வழங்கிய வேண்டிய பட்டியலின பிரிவிற்கு 13%-மும், 7.5% வழங்க வேண்டிய பழங்குடியினருக்கு 6%-ம் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில், யூகோ வங்கியில் மொத்தமுள்ள 350 இடங்களில் EWS-க்கு 10% முழுமையாக வழங்கப்பபட்டு உள்ளது. ஆனால், ஓபிசி-க்கு 14 இடங்கள், எஸ்.சி-க்கு 35 இடங்கள், எஸ்.டி-க்கு 10 இடங்கள் மட்டுமே என மிகக் குறைவாக வழங்கப்பட்டு இருக்கிறது. இடஒதுக்கீட்டிற்கு ஒட்டுமொத்தமாக 27% இடங்கள் என மிகக் குறைவாக வழங்கப்பட்டு இருக்கிறது. 256 இடங்கள் பொதுப் போட்டி பிரிவிற்கு வழங்கி இருக்கிறது அந்த வங்கி.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, ” ஏற்கனவே மத்திய அரசு யு.பி.எஸ்.சி-க்கு தெளிவான வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது. EWS அமைப்பை எளிதாக்குவதற்கு இடஒதுக்கீடு பெறும் பிரிவினரின் ஒதுக்கீட்டை ஐ.பி.பி.எஸ் குறைத்தால், அது அரசியலமைப்பின் அப்பட்டமான மீறலாகும் ” எனக் கூறியதாக நியூஸ்இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்பாக கடந்த ஆண்டில் EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்திய எஸ்.பி.ஐ வங்கி தற்போதுள்ள இடஒதுக்கீட்டை குறைக்காமல் பொதுப் போட்டி பிரிவில் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் செயல்படுத்தி இருந்தது என்றும் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

யூகோ வங்கி உள்ளிட்ட வங்கிகள் இடஒதுக்கீட்டில் முறையாக இடங்களை ஒதுக்காத போது ஐ.பி.பி.எஸ் எவ்வாறு அதை ஏற்றுக் கொண்டது எனத் தெரியவில்லை. EWS பிரிவினருக்கு முழுமையாக 10% இடஒதுக்கீட்டை வழங்கி விட்டு முன்பே இருக்கும் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் குறைத்து பொதுப் போட்டி பிரிவை அதிகரித்து இருப்பது ஏற்புடையது அல்ல.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader