தமிழ்நாட்டில் EWSன் 10% இடஒதுக்கீடு 14% மக்களுக்கு வருமா ? பாஜகவினர் சொல்லும் பொய் கணக்கு

பரவிய செய்தி

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஏதோ பிராமணர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதாகத் தவறான தகவலைப் பரப்புகிறது திமுக. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் – 67%, பட்டியலினத்தோர் – 18%, மலைவாழ் மக்கள் – 1% போக மீதி இருக்கும் 14% மக்களுக்கானது இது பொருந்தும். 

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாஜகவைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பொருளாதார இடஒதுக்கீடு குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது பிராமணர்களுக்கானது என்ற தவறான தகவலினை திமுக பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் – 67%, பட்டியலினத்தோர் – 18%, மலைவாழ் மக்கள் – 1% போக மீதி இருக்கும் 14% மக்களுக்குமானது என குறிப்பிட்டுள்ளார்.

உண்மை என்ன ?

அப்பதிவில், தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், மலைவாழ் மக்கள் இத்தனை சதவீதத்தினர் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளதின் உண்மைத் தன்மையினை கண்டறிய முயன்றோம். பல ஆண்டுகளாக சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாஜகவை சார்ந்த செல்வகுமார் குறிப்பிடுவது போல பிரிவு வாரியாக மக்கள்தொகை குறித்து எந்த அதிகாரப்பூர்வ விவரங்களோ தரவுகளோ இல்லை.

மேலும், தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதமும், பட்டியல் பிரிவினருக்கு 18 சதவீதமும் (SC 15% + SCA 3% = 18%), பட்டியல் பழங்குடியினருக்கு 1 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 69 சதவீதம் இட ஒதுக்கீடு முறையினை கொண்டுள்ளது. மீதமுள்ள 31 சதவீதம் பொதுப் பிரிவாகும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குக் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்பு திருத்தச் சட்டத்தை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 2019ம் ஆண்டு ஜனவரியில் கொண்டுவந்தது. இதன்படி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 15 மற்றும் 16-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு சில விதிமுறைகளை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. முதலாவதாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் இடஒதுக்கீடு கோரும் மாணவர் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளின் கீழ் இடஒதுக்கீட்டினை பெறாதவராக இருக்க வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சொந்தமாக 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது. சொந்தமாக வீடு இருப்பின் 1000 சதுர அடிக்குள்ளாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் தமிழ்நாட்டில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுமாயின் 50க்கும் மேற்பட்ட சாதிகள் பயன்பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ள சாதிகளில் ரெட்டியார், பாண்டிய வேளாளர் ஆகியோர் தற்போது பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், கொங்கு செட்டியார் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும் இடஒதுக்கீட்டினை பெற்று வருகின்றனர். ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டினை பெறத் தகுதியானவர்கள் கிடையாது என்பது தெளிவாகிறது. 

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நீண்ட ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இக்கணக்கெடுப்பை மேற்கொள்ள பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தமைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 2017ம் ஆண்டு தமிழ்நாட்டில் 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை சாதிவாரியாகக் கிடைக்கப்பெற்றது. அத்தரவினை கொண்டு பகுப்பாய்வு செய்தோம். 

அதன்படி 2017ம் ஆண்டில் 9,27,657 (100%) மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வினை எழுதியுள்ளனர். பிரிவு வாரியாக பார்க்கையில் ஓசி 24,955 (2.70%), பிசி 3,47,897 (37.50%), பிசி(முஸ்லீம்) 59,209 (6.40%), எம்பிசி 2,53,828 (27.36%), எஸ்சி 2,04,583 (22.05%), எஸ்சி (அருந்ததியர்) 29,023 (3.13%), எஸ்டி 9,647 (1.04%) மற்றும் எஸ்எஸ் 7,513 (0.81%) என அறிய முடிந்தது.

இந்த தரவுகளைக் கொண்டு சாதிவாரியாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கு பெற்ற மாணவர்களின் சதவீதத்தினையும், தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய இட ஒதுக்கீடு சதவீதத்தினையும் ஒப்பீடு செய்து பார்த்தோம். ஒட்டுமொத்த மாணவர்களில் பொதுப் பிரிவில் 3 சதவீதத்தினர் மட்டுமே உள்ள நிலையில் அவர்களுக்கு 10 சதவீதம் என்பது அதீதமாகவே இருப்பதைக் காண முடிகிறது.

மற்ற இடஒதுக்கீட்டு பிரிவினரில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான சதவீதமே இடஒதுக்கீட்டாகப் அளிக்கப்படுவதை அறிய முடிகிறது. 

முடிவு :

நம் தேடலில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினால் 50க்கும் மேற்பட்ட சாதிகள் பயன் அடைவர் என குறிப்பிடப்பட்டிருப்பதில், சில ஜாதிகள் தற்போதே பிசி மற்றும் எம்பிசி பிரிவுகளில் இடஒதுக்கீட்டினை பெறுகின்றனர்.

பல ஆண்டுகளாக சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த செல்வகுமார் குறிப்பிட்டிருக்கும் மக்கள் தொகை பற்றிய தகவலானது ஆதாரமற்ற தகவல் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader