அதிக வெப்பநிலையால் கார்கள், ட்ராபிக் லைட்கள் உருகியதா ?

பரவிய செய்தி
குவைத் நாட்டில் அதிகப்படியான வெப்பநிலை நிலவுவதால் கார்கள், ட்ராபிக் லைட்கள் உருகி உள்ளன.
மதிப்பீடு
விளக்கம்
அரபு நாடுகளில் வெயிலும் தாக்கம் மிக அதிகம் என்பதை அனைவரும் அறிந்து இருப்போம். இந்நிலையில், குவைத் நாட்டில் நிலவும் வெப்பநிலையால் ட்ராபிக் லைட்கள் முதல் கார்கள் வரை உருகி வருவதாக சில சமூக வலைதளப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
சவூதி அரேபியாவில் 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால் கார்கள் உருகி வருவதாக மற்றொரு பதிவில் இதே புகைப்படங்களை காண முடிந்தது. இதேபோன்று, வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 58 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் கார்கள் உருகியதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.
எங்கே நிகழ்ந்தது ?
கார்களின் பகுதி உருகிய சம்பவம் நிகழ்ந்தது குவைத், சவூதி அரேபியா மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் அல்ல. அமெரிக்காவின் அரிசோனாவில் ஜூன் 2018-ம் ஆண்டில் நிகழ்ந்தது. அங்கு கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் பொழுது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல கார்கள் நெருப்பில் சிக்கி உருகி உள்ளன. கோடைக்காலத்தில் அதிக வெப்பநிலையால் அல்ல.
2018 ஜூன் 19-ம் தேதியன்று கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நெருப்பின் தாக்கத்தால் சேதமடைந்து உள்ளன. இதில், டேனி என்பவருடைய காரின் பின் பகுதியில் வெப்பத்தால் உருகி உள்ளது குறித்து தெரிவித்ததாக Kold news 13-ல் செய்தி வெளியாகி உள்ளது.
கார்கள் உருகியப் படங்கள் அரபு நாடுகளைச் சேர்ந்தது அல்ல, அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் தீ விபத்தால் உருகி உள்ளன.
ட்ராபிக் லைட் :
2017-ல் துபாய் நாட்டில் வெப்பத்தால் ட்ராபிக் லைட்கள் உருகியதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. அது தொடர்பாக, Youturn பதிவிட்டு இருந்தது. ட்ராபிக் லைட் உருகிய படங்கள் குவைத் நாட்டைச் சேர்ந்தது. ஆனால், இந்த ஆண்டில் வெப்பத்தால் உருகிய இப்படி ஆகவில்லை.
மேலும் படிக்க : துபாயில் வெப்பத்தால் போக்குவரத்து விளக்குகள் உருகியதா ?
2013-ல் குவைத் நாட்டில் ஏற்பட்ட கார் விபத்தில் ட்ராபிக் லைட்கள் உருகி உள்ளன. இது தொடர்பாக youtube-ல் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தனர். அந்த விபத்தின் பொழுது ட்ராபிக் லைட்கள் உருகியதை அதிக வெப்பநிலையால் உருகியதாக வதந்தியை மீண்டும் பரப்பி வருகின்றனர்.
இரு வேறு பகுதிகளில், வெவ்வேறு காரணத்தினால் ஏற்பட்ட நிகழ்வை அதிக வெப்பநிலையால் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.