This article is from Mar 26, 2018

தகவல் திருட்டு, கொட்டும் பணம். ஃபேஸ்புக் மீளுமா ?!

பரவிய செய்தி

ஃபேஸ்புக்கில் தனிநபர் பக்கத்தின் தகவல்களைத் திருடி பல நாடுகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம்.

மதிப்பீடு

சுருக்கம்

கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தால் தவறு நடந்ததை ஒப்புக் கொள்கிறோம். என்னை மன்னியுங்கள், வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.

விளக்கம்

ஒரு தனிப்பட்ட மனிதனின் ஃபேஸ்புக் பக்கத்தின் தகவல்களை அறிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்கள், கருத்துக்களை கொண்டு செல்வதன் மூலம் ஒரு அரசியல் தலைவர் அல்லது நிறுவனத்தை உயர்த்திக் காட்ட இயலும்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம், அரசியல் தலைவர்கள், பல தனியார் நிறுவனங்களுக்கு டேட்டா சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகல்களை அவர்களின் ஒப்புதல் இன்றி, யாருக்கும் தெரியாமல் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க தேர்தலில் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா :

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவாக கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டது. அத்தேர்தலின் போது, தனிப்பட்ட பயனாளர்களின் விவரங்களை அறிந்து, அவர்களிடையே ட்ரம்ப்புக்கு சாதகமாக பிரச்சார விளம்பரங்களை பதிவிட்டு வாக்காளர்களை கவர்ந்துள்ளது. சேனல் 4  என்ற செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளர் கிறிஸ் நடத்திய புலனாய்வு நிகழ்ச்சியில், கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் சி.இ.ஓ அலெக்ஸ்சாண்டர் நிக்ஸ் தங்களின் வேட்பாளரை வெற்றி பெற வைக்க செய்யும் பிரச்சார வழிமுறைகள் பற்றி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மீது இங்கிலாந்து எம்.பி டாமியன் கொலின்ஸ் தலைமையில் எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மார்க் மன்னிப்பு :

ஃபேஸ்புக் கணக்குகளை மூட வேண்டிய நேரம் என்ற ஹஷ்டக் மூலம் கருத்துக்கள் வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆகியது. இதன் விளைவால், 200 கோடி பயனாளிகளைக் கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கின.

இதற்கிடையில், ஃபேஸ்புக்கின் நிறுவனர் Mark Zuckerberg , “ கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தால் தவறு நடந்ததை ஒப்புக் கொள்கிறோம். இதை ஒரு பாடமாக கற்றுக் கொள்வோம். என்னை மன்னியுங்கள், வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம், தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளது. மேலும், கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் சி.இ.ஓ அலெக்ஸ்சாண்டர் நிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா :

2010-ம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்கள் பற்றி ஆழமான ஆய்வு செய்ததாக கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தனது இணைய தளத்தில் தெரிவித்துள்ளது. அதில், அரசியல் கட்சிகளிடம் செய்யப்பட்ட ஒப்பந்தம், இரு கட்சிகளின் ஊஞ்சலாடும் வாக்குகள், அவர்களின் தேர்தல் அக்கறையின்மை பற்றிய அளவீடு மற்றும் அவர்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை சார்ந்தது.

“ எங்களது வாடிக்கையாளர் 90% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற CA இலக்கை அடைந்து வரலாறு காணாத சாதனையைப் படைத்தார் ” என்று தெரிவித்துள்ளது.

2010-ம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.

கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், பீகார் ஒப்பந்தம் அதன் தாய் நிறுவனமான Strategic Communications Laboratories group மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் ஆவ்லினோ பிசினஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் அதன் துணை நிறுவனமாகச் செயல்படுகிறது. இதன் உரிமையாளர் அம்ரீஷ் த்யாகி, ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் கே.சி.த்யாகியின் மகன் ஆவார் என்று wire இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.

2014-ல் நடைபெற்ற இந்திய பாராளுமன்ற தேர்தலில் இரு தேசிய கட்சிகளிடம் சென்றடைய எண்ணியது கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா. எனினும், அதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை. ஆனால், 2019-ல் தேர்தலில் இரு தேசிய கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

இந்திய நாட்டில் பெருவாரியாகா இளைஞர்களின் வாக்குகள் உள்ளதால் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா போன்ற நிறுவனங்களுக்கு செழிப்பான இடமாக அமையும். 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பிரச்சார கருவியாக விளங்கியது.

இந்திய அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகள் :

2014-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா மூலமாக ராகுல் காந்தியின் மதிப்பை உயர்த்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் தகவல்கள் கசிவதை மத்திய அரசு அனுமதிக்காது ” என்று தெரிவித்துள்ளார்.

அப்படி என்ன நடந்தது : 

 நம்பக் கடினமாக இருந்தாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று. இணையத்தின் மூலம் நாம் அனைவரும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம். அடுத்த நூற்றாண்டில் மிகப்பெரிய சொத்தாக இருக்கப் போவது தகவல்களே. அதைப்போல மிக அதிகமாக களவு போக போவதும் தகவல்கள்தான். இந்த தகவல் திருட்டு, அந்த தகவல் எப்படி பணமாகிறது என்பதெல்லாம் மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்.

டாக்டர் கோகன் என்பவர் தயாரித்த app, ஒரு மனிதனின் மனநிலையை புரிந்து கொள்வதற்கு அவன் ஃபேஸ்புக்கில் இடும் லைக்-களை வைத்து கணிப்பது. இதன் மூலம் அவன் மனநிலையை தெரிந்து கொண்டு அவன் எந்த கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலையில் இருக்கிறான் அல்லது எந்த கட்சிக்கு வாக்களிக்க குழப்பத்தில் இருக்கிறானா என்ற தகவலை வைத்து கொண்டு அந்த Dilemma வாக்காளர்களை தன் பக்கம் கவர்வது எப்படி ? என்கிற சூத்திரம் தாம் இந்த Algoritham.

உதாரணமாக ஒருவரின் இன, நிற, மத, அரசியல் சிந்தனையை தெரிந்து கொண்டால் அந்த நபர் விரும்புவது போன்று ஒரு வேட்பாளர், அவர் சார்ந்த மதத்திற்கு ஆதரவாக அல்லது அவரது அரசியல் நிலைபாட்டிற்கு ஒட்டி அந்த வேட்பாளரும் சிந்திக்கிறார் என்று விளம்பரம் மூலம் கொண்டு சேர்க்க முடியும். இதைப் போன்ற நிகழ்வுதான் தற்போது ஃபேஸ்புக்கில் அரங்கேறியுள்ளது. இப்போது ஓரளவிற்கு தகவலின் முக்கியத்துவம் உங்களுக்கு புரிந்து இருக்கும்.

ஃபேஸ்புக் தப்பிக்குமா :

இந்த சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்கின் பங்கு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. மார்ச் 16-ம் தேதி 185 USD ஆக இருந்த  ஃபேஸ்புக்கின் பங்கு விலை 23-ம் தேதி(இன்று) 164.89 USD ஆக மாறியது. தொடர்ந்து பங்கு விலை சரிவது ஒருபுறம், இன்னொருபுறம் வெளிநாடுகளில் எல்லாம் சைபர் க்ரைம் சட்டம் கடுமையானது. இதனால், சட்ட நடவடிக்கை பாயுமா, சில நாடுகளில் ஃபேஸ்புக் தடை செய்வதற்கும் கூட வாய்ப்புள்ளது.

நம் நாட்டிலும் மத்திய அமைச்சர் ஃபேஸ்புக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்படி அரசாங்கங்கள் மூலம் ஃபேஸ்புக்நிறுவனத்திற்கு நெருக்கடி கூட்டவும் வாய்ப்பு உள்ளது. இன்னொருபுறம் #Time to leave facebook என்று ட்ரென்ட் ஆகி வருவதால் பெருமளவில் பயனர்கள் ஃபேஸ்புக் விட்டு வெளியேறவும் வாய்ப்புள்ளது. எப்படி பார்த்தாலும் ஃபேஸ்புக் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. இதிலிருந்து ஃபேஸ்புக் மீண்டு வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ நமது தகவல்களை பாதுகாக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறோம் என்பதை உணருங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader