This article is from Jun 02, 2018

ஃபேஸ்புக் பயன்படுத்த இனி கட்டணமா ?

பரவிய செய்தி

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இனி கட்டணம் செலுத்தி ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் முறையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

உலகளவில் சமூக வலைத்தளங்களில் முதன்மையானதாக விளங்கி வரும் ஃபேஸ்புக், பல கோடி பயன்பாட்டாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இன்றைய சமுதாயத்தில் நிகழும் நல்லதும் சரி, கெட்டதும் சரி அனைத்தும் ஃபேஸ்புக் பக்கங்களில் பார்த்து தெரிந்துக் கொள்ள முடிகிறது.

அதற்கு காரணம், இன்டர்நெட் வசதியும், ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் இருந்தால் போதும். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலவசமாக பலரும் பயன்படுத்த முடிவதால் மட்டுமே இது சாத்தியம்.

இந்நிலையில், ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இனி கட்டணம் செலுத்தி ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும் என்ற அறிவிப்பை அந்நிறுவனம் அறிவிக்கப் போவதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க், அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை செய்தி. இனி ஃபேஸ்புக் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். எனினும், இந்த செய்தியை உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்-ல் உள்ளவர்களுக்கு அனுப்ப வேண்டும். அதன் பின் உங்கள் icon நீல நிறத்தில் மாறினால் பணம் செலுத்த தேவையில்லை, முற்றிலும் இலவசம். இதை நீங்கள் நம்பாமல் செய்தியை பகிரவில்லை என்றால் அடுத்த நாள் உங்கள் கணக்கு மூடப்படும், பின் கட்டணம் செலுத்தி உபயோகிக்கும் நிலைமை உருவாகும் என்று கூறியதாக பரவுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் கட்டணம் விதிக்க உள்ளதாகக் கூறி செய்தி வெளியாவது ஒன்றும் முதல் முறை அல்ல. 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018 வரை ஃபேஸ்புக் நிறுவனம் கட்டணம் விதிக்கப்போவதாக பல நாடுகளில் இந்த தவறான செய்திகள் பரவி வருகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்த மாத கட்டணமாக 4.99 , 9.99 ,  6.99 டாலர்களை கொண்ட பல திட்டங்கள் இருப்பதாகவும், இந்த செய்தியை அனைத்து குரூப்களுக்கும் அனுப்ப வேண்டும், லிங்க்-ஐ கிளிக் செய்து இலவசமாக பயன்படுத்துங்கள் என்று பலவிதத்தில் புரளிகள் வெளியாகிறது.

உலக நாடுகள் முழுவதும் இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு காரணம், ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களை குறைப்பதற்கு, தங்களின் பதிவுக்கு அதிக ஷேர் பெறுவதற்கு, லிங்கை ஓபன் செய்வதால் குறிப்பிட்ட விளம்பரம், இணைய பக்கத்தின் மூலம் பணம் பெறுவதற்கு, சில நாடுகளில் இது போன்ற செய்திகளில் வரும் லிங்க் மூலம் மால்வேர் தாக்குதல் நடத்தவும், ஹக் செய்யவும் கூட இச்செய்திகளை பயன்படுத்துகின்றனர்.

ஃபேஸ்புக் பயன்படுத்த நிறுவனம் கட்டணம் வசூலிக்கப் போகிறதா என்று ஃபேஸ்புக் ஹெல்ப் சென்டரில் கேள்வி கேட்டதற்கு“ ஃபேஸ்புக் ஒரு இலவச தளம், தொடர்ந்து உபயோகிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்டதில்லை என்று பதிலளித்துள்ளது ”

சமீபத்தில் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அரசியலுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கிடம் நடைபெற்ற முதல் விசாரணையில், எப்பொழுதும் ஃபேஸ்புக் கட்டணமின்றி பயன்படுத்தும் தளமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் ஒரு இலவசமான சமூக வலைத்தளம் என அனைவரும் அறிவர். எனினும், இதுபோன்ற செய்திகள் பலரும் நம்பக்கூடிய வகையில் பதிவிடப்படுகிறது. ஃபேஸ்புக்கில் புரளியை பரப்பியதை விட்டு ஃபேஸ்புக் தளத்தை வைத்தே புரளியை பரப்பி விட்டார்களே..!

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader