வதந்தியில் புரளும் TNnews24 | கீழடியை அறுநூற்றுமலை ஆய்வு மிஞ்சியதா ?

பரவிய செய்தி
கீழடியை மிஞ்சிய அறுநூற்றுமலை ஆய்வு முடிவுகள் ! கொண்டாட்டத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்.
மதிப்பீடு
சுருக்கம்
தொடர்ந்து வதந்திகளை வெளியிட்டு வரும் வலதுசாரி ஆதரவு இணையதளங்கள் குறித்து விரிவாக காண்போம்.
விளக்கம்
சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு தங்களின் இணையதள செய்திகளை பிரபலப்படுத்திக் கொள்ளும் TNnews24 , கதிர் நியூஸ் உள்ளிட்ட இணையதளங்கள் வலதுசாரி ஆதரவாக தொடர்ந்து வதந்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்பதை நம்முடைய செய்திகளில் ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறோம்.
கீழடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை கார்பன் பகுப்பாய்வு செய்ததில் கி.மு 6-ம் நூற்றாண்டை கடந்து செல்வதாக முடிவுகள் வெளியாகி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்து இருந்தது. எனினும், இதுவரை கீழடியில் மதம், சாதி சார்ந்த அடையாளங்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் வலதுசாரி ஆதரவாளர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி வந்தது. இதனாலேயே, கீழடியில் இந்து மதக் கடவுள்களின் சிலைகள் கிடைத்ததாக ஏராளமான புரளிகளை பரப்பி, அதனை நாமும் முறியடித்து இருந்தோம்.
TNnews24 இணையதளத்தின் வதந்திகள் !
இந்நிலையில், TNnews24 என்ற இணையதளத்தில் கீழாடி ஆராய்ச்சிகளை மீஞ்சும் வகையில் அறுநூற்றுமலை ஆய்வுகளின் முடிவுகள் கிடைத்து உள்ளதாகவும், அங்கு 6,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்துள்ளதால் இந்து அமைப்புகள் கொண்டாட்டத்தில் இருப்பதாகவும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்டு உள்ளது.
இதற்கெல்லாம் அதிகாரப்பூர்வ செய்தியையோ அல்லது ஆதாரத்தையோ கேட்டால் அதற்கு பதில் கிடைக்க வாய்ப்பில்லை. ஆக, அறுநூற்றுமலை ஆய்வின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள செய்திகளை தேடிப்பார்த்தோம்.
எங்களின் தேடலில், 2017-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி ” தினமலர் ” நாளிதழின் இணையதளத்தில் ” புதிய கற்கால கருவி கண்டுபிடிப்பு ” என்ற தலைப்பில் வெளியான செய்தி கிடைத்தது.
அதில், ” வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலையில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் உள்ளிட்ட குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போழுது, பழமையான ஈஸ்வரன் கோவிலில் இரு நந்தி சிலைகள், ஒரு பிள்ளையார் சிலைகளுக்கு நடுவே 100-க்கும் மேற்பட்ட கைக்கோடாரி வகையைச் சேர்ந்த புதிய கற்கால கருவிகளை வைத்து மக்கள் வழிபட்டு வந்ததை கண்டறிந்தனர் ”
இது குறித்து ஆய்வு குழுவினர் கூறுகையில், ” வாழப்பாடி அருகே அறுநூற்றுமலை மற்றும் கல்வராயன் மலைப்பகுதியில் கி.மு 2000 ஆண்டு வரை புதிய கற்கலாம் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏராளமான கிராமங்களில், நீர்நிலைகளில் சிதறிக்கிடந்த பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய , புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோவில்களில் வைத்து மக்கள் வழிபட்டு வந்துள்ளனர் ” எனக் கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
அறுநூற்றுமலை பகுதியில் புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கடந்த 2017-லேயே செய்திகள் வெளியாகி இருக்கிறது. எனினும், கிராமங்களில், நீர்நிலைகளில் கிடைத்த புதிய கற்கால கருவிகளை தற்போதைய வழிபாடுகளுடன் இணைத்து வழிபட்டு வந்துள்ளனர். இதைத் தவிர்த்து, தோண்ட தோண்ட மத அடையாளங்கள் கிடைப்பதாக செய்தியில் வெளியாகவில்லை.
இந்த செய்தியை வெளியிட்டது, வலதுசாரிகளுக்கு ஆதரவை தெரிவிக்கும் ” தினமலர் ” . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியை எடுத்துக் கொண்டு அதைத் திரித்து தற்பொழுது நடந்தது போல் வெளியிட்டு உள்ளது TNnews24.
புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி தானம் :
சில தினங்களுக்கு முன்பாக, கிறிஸ்தவ பள்ளிகளில் மாணவிகளின் தலைமுடியை வெட்டி விடுவதாக ஒரு வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஆனால், அந்த வீடியோ புற்றுநோயாளிகளுக்கு தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சியும் பொழுது எடுக்கப்பட்டது என விரிவாக, ஆதாரத்துடன் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதே வீடியோவை வைத்து, TNnews24 அக்டோபர் 2-ம் தேதி ” இதற்குத்தான் பெண்களை பள்ளிக்கு அனுப்பினர்களா பாதிரியார் முன்னிலையில் நடக்கும் செயலை பாருங்கள் ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் ” புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு தலைமுடியை வெட்டி வாங்குவதாகவும் கிறிஸ்தவ பள்ளிகளில் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன ” என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : கிறிஸ்தவப் பள்ளியில் மாணவிகளின் தலைமுடியை வெட்டினார்களா ?| வைரலாகும் வீடியோ.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடியை தானமாக வழங்கும் எண்ணத்தை கூட தவறாக சித்தரிக்கின்றனர் என்பதை பார்த்தலே தெரிகிறது. ஒரு ஆதாரமும் இல்லாமல் இவர்களாகவே மக்கள் குற்றச்சாட்டுகளை கூறுவதாக கூறிக் கொள்கிறார்கள் .
இதற்கு முன்பு வெளியிட்ட புரளிகள் :
2019 பிப்ரவரி மாதம் திருபுவனம் ராமலிங்கம் கொலையில் கைதானவர்களை ஜாமீனில் எடுக்க அங்குள்ள ஜமாத் நிர்வாகம் பணம் திரட்டி வருவதாக TNnews24 எழுதி இருந்தது. அதனை ஹெச்.ராஜா அவர்களும் பகிர்ந்து இருந்தார்.
மேலும் படிக்க : மத கலவரம் உள்பட போலிச் செய்திகளை வெளியிடும் TNnews24 இணையதளம் !
ஆனால், பிப்ரவரி 8-ம் தேதி ஜமாத் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ தவறாக பரவும் அவதூறு பரப்புரையை கண்டிப்பதாகவும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ” என மறுப்பு தெரிவித்து இருந்தது.
இப்படி ஏராளமான புரளிகளை உதாரணமாக கூறலாம் !
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, TNnews24 போன்ற இணையதளங்கள் மதசார்ந்த பெருமைக்கும், வன்மத்திற்கும் வதந்திகளை பரப்புவதையே வேலையாகக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட கட்சிக்கும், அமைப்பிற்கும் ஆதரவாக இருப்பதற்கு அவர்களுக்கு எதிரானவர்கள் மீது வதந்தியை வைத்து குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர் என்பதற்கு உதாரணங்களை மேலே படித்த செய்திகளில் இருந்து அறிந்து கொண்டிருக்கலாம்.
இதுபோன்ற இணையதளங்களிடம் இருந்து மக்கள் சிறிது எச்சரிக்கையாக இருந்து கொள்ளுதல் நல்லது.