போலிப் பாஸ்போர்ட்டில் இந்தியா வரும் ரோஹிங்கியா, வங்கதேசத்தினர் எனப் பரவும் குவைத்தின் பழைய வீடியோ !

பரவிய செய்தி
போலி பாஸ்போர்ட்டில் வருகை உண்மையான பாஸ்போர்ட்டை எப்படி மறைத்து வைத்துள்ளனர்:? போலி இந்திய பாஸ்போர்ட் தயாரித்து அதில் பாரதத்திற்குள் வரும் வங்கதேசதவர்கள் & ரோஹிங்யாக்கள்: மேற்கு வங்கத்தில் அதிகமான போலி பாஸ்போர்ட் மட்டுமல்ல ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை அதிகமாக நடைபெறுகிறது.
மதிப்பீடு
விளக்கம்
மியான்மரில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மதவெறி வன்முறைகள் காரணமாக தங்கள் கிராமங்களில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்த்தப்பட்டனர். இதன் காரணமாக அருகிலுள்ள பல அண்டை நாடுகளுக்கு சென்றவர்களில் பலர் வங்காளதேசம் வழியாக, இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்திற்கும் வந்தனர்.
இந்நிலையில் தங்களுடைய உண்மையான பாஸ்போர்ட்டை மறைத்துவிட்டு, போலியான இந்திய பாஸ்போர்ட்டுடன் ரோஹிங்கியா மற்றும் வங்கதேச மக்கள் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டனர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் 15 வினாடிகள் கொண்ட வீடியோவில், கண்காணிப்பாளர் ஒருவர், பயணி ஒருவரின் காலணியிலிருந்து வங்கதேசத்தின் பாஸ்போர்டை எடுப்பது போன்று உள்ளது. மேலும் பகிரப்படும் பதிவுகளில் “மேற்கு வங்கத்தில் அதிகமான போலி பாஸ்போர்ட் மட்டுமல்ல, போலி ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைகள் கூட அதிகமாக கிடைக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதன் உண்மையான வீடியோ கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
மேலும் கடந்த 2015 டிசம்பர் 18 அன்று Kuwait Uptodate எனும் யூடியூப் பக்கத்தில் “இந்திய பாஸ்போர்ட் உடன் குவைத்தில் நுழைந்த வங்கதேசத்தினர்.” எனும் தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
2015 டிசம்பர் 18 அன்று Kuwait Reporter எனும் முகநூல் பக்கத்திலும் “இந்திய பாஸ்போர்ட் உடன் குவைத்தில் நுழைந்த வங்கதேசத்தினர்” என்று ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் குறிப்பிட்டு இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதுகுறித்து மேலும் தேடியதில், அரபு டைம்ஸ் எனும் அரேபிய இணையதளத்தில் 2015 டிசம்பர் 19 அன்று “Many Bangladeshis held trying to enter on ‘fake’ Indian passports” என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளதை காண முடிந்தது. அதில் “போலி இந்திய பாஸ்போர்ட்டில் குவைத் நாட்டிற்குள் நுழைய முயன்றதாக பல வங்கதேசத்தினரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் முன்னதாக, எங்கள் நாட்டிலிருந்து தாங்கள் நாடு கடத்தப்பட்டவர்கள் என்று தெரிவித்ததாகவும், பின்னர் அவர்களது இந்திய பயண ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்தபோது, அவை போலியானது என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்களது பொருட்களை சோதனை செய்த போலீசார், அவர்களின் உண்மையான வங்கதேச பாஸ்போர்ட்டுகளை காலணியில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: மேற்கு வங்கத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்குள் புகுந்த 63 ரோஹிங்கியா முஸ்லீம்கள் பிடிபட்டதாகப் பரவும் வதந்தி !
இதற்கு முன்பும் ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் குறித்து தவறாகப் பரப்பப்பட்ட செய்திகள் குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: மேற்கு வங்கத்தில் இந்து பெண்களின் நிலை எனப் பரவும் உத்தரப் பிரதேசத்தின் பழைய வீடியோ!
முடிவு:
நம் தேடலில், இந்தியாவிற்குள் நுழைந்த ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தினர் எனப் பரவி வரும் வீடியோ தற்போது நடந்தது அல்ல என்பதையும், இது 2015ல் வெளியிடப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் வீடியோவில் கூறியிருப்பது போல் வங்கதேசத்தினர் சிலர் போலி இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்தது உண்மை என்பதையும், அதேசமயம் அவர்கள் பிடிபட்டது இந்தியாவில் அல்ல, குவைத் நாட்டில் என்பதையும் அறிய முடிகிறது.