சுஜித் என வைரலாகும் மற்றொரு குழந்தையின் புகைப்படம், வீடியோக்கள் !

பரவிய செய்தி
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுவதற்கு முன்பாக குழந்தை சுஜித்தின் சேட்டை.
மதிப்பீடு
விளக்கம்
திருச்சி அருகே நடுக்காட்டுபள்ளியில் சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து மீட்க முடியாமல் 80 மணி நேரங்களை கடந்து இறந்து போனான். குழந்தை சுஜித்தின் மரணம் தமிழகத்தில் பெரும் வேதனையை அளித்து இருக்கையில், சுஜித் உடைய புகைப்படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தனர்.
Sujith dance viral video archived link
Sujith viral tiktok video post archived link
இந்நிலையில், முகநூல் , டிக் டாக் உள்ளிட்டவையில் குழந்தை சுஜித் உடைய புகைப்படங்கள் , வீடியோக்கள் என தவறாக மற்றொரு குழந்தையை பரப்பி வருகின்றனர். இறந்த குழந்தை சுஜித் என நினைத்து வேறொரு குழந்தை நடனமாடும் வீடியோ, புகைப்படத்தை பரப்பி வருவதை பலரும் அறியாமல் இருக்கின்றனர்.
டிக் டாக்கில் சுஜித் என வைரலாகும் குழந்தையின் வீடியோ, புகைப்படங்கள் என்னுடைய அண்ணன் மகன். இந்த வீடியோ, படத்தை வைரல் செய்ய வேண்டாம் என ஒருவர் பேசும் வீடியோ, ஃபாலோயர் ஒருவர் மூலம் நமக்கு அளிக்கப்பட்டது. அந்த குழந்தையின் புகைப்படமே சுஜித் கடைசியாக செய்த டிக் டாக் வீடியோ என வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவிலும், புகைப்படத்தில் இருப்பது சுஜித் அல்ல என அக்குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். வைரலாகும் குழந்தை வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தை சேர்ந்த முனிவேல் மற்றும் சுகன்யாவின் 2 வயது மகன் நித்திஷ்.
தங்களுடைய மகனுக்கு அஞ்சலி செலுத்துவது போன்று வெளியாகும் செய்திகளால் தங்களுக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டு இருப்பதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், தவறாக பகிரப்படும் தங்கள் குழந்தையின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குழந்தை சுஜித்தை இழந்தது அனைவருக்கும் வேதனையை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால், சுஜித் என வேறொரு சிறுவனின் புகைப்படத்தை, வீடியோக்களை பகிர்வது அக்குழந்தையின் பெற்றோருக்கு எந்த அளவிற்கு மன வேதனையை அளிக்கும் என புரிந்து கொண்டு தவறாக பதிவிட்ட வீடியோக்களை நீக்குங்கள், மற்றவர்களும் நீக்க உங்களால் முடிந்த அளவு தெரியப்படுத்துங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.