தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றி வெளியே விற்பதாக பரவும் வீடியோக்கள்| உண்மை என்ன ?

பரவிய செய்தி
கவனம்.. தடுப்பூசி முகாம்களில் ஊசி போடுவது போல ஊசியை உடலுக்குள் சொருகி, சிரிஞ்சை அழுத்தாமல் மருந்தை மீண்டும் பாட்டிலுக்குள் ஊற்றி வெளியே விற்கும் அவலமும் அரங்கேறத்தொடங்கி விட்டது.
மதிப்பீடு
விளக்கம்
தடுப்பூசி முகாம்களில் ஊசி போடுவது போன்று ஊசியை சொருகி விட்டு சிரிஞ்சை அழுத்தாமல் மருந்தை மீண்டும் பாட்டிலுக்குள் ஊற்றி வெளியே விற்கும் அவலம் அரங்கேறுவதாகக் கூறி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
வீடியோக்களில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராக இருக்கும் நபரின் கையில் ஊசியை குத்தி விட்டு மருந்தை செலுத்தாமல் அப்படியே வெளியே எடுக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா, இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
முதல் வீடியோ :
இவ்வீடியோ குறித்து தேடுகையில், ” சரியாக தடுப்பூசி செலுத்தாத செவிலியர் குறித்து விசாரணையை நடத்த சுகாதார அமைச்சர் கேமிலோ சலினாஸ் அறிவித்தார். செவிலியர் அடையாளம் காணப்பட்டுள்ளார் ” என ஏப்ரல் 26-ம் தேதி Ecuavisa எனும் ட்விட்டர் பக்கத்தில் அதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
Véalo en @revistavistazo.ec: El ministro de Salud, Camilo Salinas, anunció una investigación al enfermero que no vacunó adecuadamente. Salinas señaló que se identificó al enfermero para tomar acciones. pic.twitter.com/i8fa4lrxml
— Ecuavisa (@ecuavisa) April 26, 2021
இந்த சம்பவம் நிகழ்ந்தது இந்தியா அல்ல. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குயாகுவில் நிகழ்ந்ததாக சில ஊடக செய்திகளின் அறிக்கையும் உள்ளன.
cnnespanol செய்தியில், ஈக்வடார் அதிபரின் அமைச்சரவையின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் வாட் கூறுகையில், 55 வயதான அந்த நபர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வரிசையில் சென்று மோசடி செய்துள்ளார். வீடியோவில் காண்பிக்கப்பட்டபடி, செவிலியர் முதலில் அவருக்கு தடுப்பூசி போடவில்லை. ஆனால், பின்னர் அவருக்கு டோஸ் கொடுக்கப்பட்டது. அவர்கள் இருவருமே விசாரணையில் உள்ளனர் ” எனக் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது வீடியோ :
இவ்வீடியோ குறித்து தேடுகையில், மெக்சிகோ நாட்டின் செய்தித்தாளான El Universal உடைய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் 2021 ஏப்ரல் 4-ம் தேதி இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
2021 ஏப்ரல் 3-ம் தேதி மெக்சிகவின் தேசிய பாலிடெக்னிக் நிறுவனத்தில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் பள்ளியில் ஒரு முதியவருக்கு செவிலியர் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் போது மருந்தை செலுத்தாமல் ஊசியை எடுத்த சம்பவம் அந்த நபரின் உறவினரால் வெளியே தெரிய வந்துள்ளது.
▪️TARJETA INFORMATIVA▪️
Con relación a los hechos ocurridos en la jornada de vacunación de ayer en la Escuela Nacional de Ciencias Biológicas del Instituto Politécnico Nacional, la #SEDESA y @Tu_IMSS lamentan lo ocurrido e informan lo siguiente: pic.twitter.com/DJgxptB57e— IMSS (@Tu_IMSS) April 4, 2021
ஏப்ரல் 4-ம் தேதி மெக்சிகன் இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் செக்யூரிட்டி(IMSS) தன் ட்விட்டர் பக்கத்தில் சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்து உள்ளது. அந்த செவிலியர் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் மற்றும் மன்னிப்பு கோரவும் செய்துள்ளது.
முடிவு :
நம் தேடலில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் போது ஊசியை குத்தி விட்டு மருந்தை செலுத்தாமல் வெளியே எடுக்கும் காட்சிகள் கொண்ட வீடியோக்கள் இந்தியாவில் நிகழ்ந்தவை அல்ல.
செவிலியர்களின் அலட்சியம் மற்றும் கவனக் குறைவால் இதுபோன்ற தவறான சம்பவங்கள் சில நாடுகளில் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், தடுப்பூசியை செலுத்தாமல் ஏமாற்றி வெளியே விற்பதாக கூறுவது எல்லாம் இணைக்கப்பட்ட கதை என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.