கர்நாடகாவில் காங்கிரசின் முஸ்லீம் வேட்பாளருக்கு போலி வாக்கு செலுத்தி வென்றதாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றியின் ரகசியம்

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த மே 10 அன்று நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் போலி வாக்குப்பதிவு செய்து காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றதாகக் கூறி வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

Archive Link

மேலும் “கர்நாடகாவின் குல்பர்கா உத்தர் (Gulbarga Uttar) தொகுதியிலுள்ள முஸ்லீம் சாவடி ஒன்றில் சுமார் 6000 வாக்குகளைப் போலியாக காங்கிரஸ் கட்சியினர் வாக்குப்பதிவு செய்கின்றனர். எனவே அந்த தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கனீஸ் பாத்திமாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பரப்பி வருகின்றனர்.

Archive Link

உண்மை என்ன ?

போலி வாக்குப்பதிவு நடந்ததாகக் கூறப்பட்ட கர்நாடகாவின் குல்பர்கா உத்தர் தொகுதியின் முடிவுகளைத் தேடியபோது, ​​காங்கிரஸின் கனீஸ் பாத்திமா 45.28% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீபிரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்க்கையில், இந்த வைரலான வீடியோ, ‘TV9 Bangla news live‘ என்னும் யூடியூப் சேனலில் பிப்ரவரி 27, 2022 அன்று ‘மேற்கு வங்க நகராட்சி தேர்தல் 2022’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது தெரிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ 2022-இல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

இதுகுறித்து மேலும் தேடியதில், மேற்கு வங்க காங்கிரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான West Bengal Congress என்னும் பக்கத்தில் பிப்ரவரி 28, 2022 அன்று தற்போது பரவி வீடியோ குறித்தப் பதிவுகளை காண முடிந்தது.

Archive Link

இதே போன்று மேற்கு வங்க பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான BJP Bengal பக்கத்தில் 27 பிப்ரவரி 2022 அன்று இது குறித்தப் பதிவுகள் வெளியாகி இருக்கிறது.

Archive link

மேலும் ‘CPIM West Bengal‘ தன்னுடைய முகநூல் பக்கத்தில் 27 பிப்ரவரி 2022 அன்று இந்த வைரல் வீடியோவை வெளியிட்டு “தெற்கு டம் டம் என்ற நகராட்சியின் வாக்களிப்பு நடந்து வருகிறது. பூத் எண் 108, வார்டு எண் 33.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மேற்கு வங்காள மாநிலத்தின் 20 மாவட்டங்களில் உள்ள 108 நகராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27, 2022 அன்று நடைபெற்றது என்பதையும், அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் மோசடியில் ஈடுபட்டதற்கு காங்கிரஸ் , CPIM மற்றும் பாஜக போன்ற முக்கிய கட்சிகள் இதற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து குற்றம் சாட்டியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

இதற்கு முன்பும் 2022-இல் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போதும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்துள்ளது. இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்த யூடர்ன் மார்ச் 2022 இல் தமிழிலும், டிசம்பர் 2022 இல் ஆங்கிலத்திலும் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: மக்களைத் துரத்தி விட்டு ஓட்டு போடும் முகவரின் வைரல் வீடியோ.. எங்கு நிகழ்ந்தது ?

மேலும் படிக்க: Video of illegal voting from West Bengal is shared as a recent one from Gujarat

முடிவு:

நம் தேடலில், கர்நாடக சட்டசபை தேர்தலில் குல்பர்கா உத்தர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முஸ்லீம் வேட்பாளருக்காக போலி வாக்குப்பதிவு செய்வதாக பரவி வரும் வீடியோ தவறானது. இது மேற்கு வங்காள மாநிலத்தில் 2022-ஆம் ஆண்டில் நடந்த நகராட்சி தேர்தலின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni is working as a Sub-Editor in You Turn. She completed her Masters in History from Madras university. She holds her Bachelor’s degree in Engineering and holds a Bachelor’s degree in Tamil Literature. She is the former employee of IT Company. She currently finds the fake news in social media in order to verify the factual accuracy.
Back to top button