பாகிஸ்தானில் தந்தை தனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றதாகப் பரவும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி
பெரியாரை படி பெரியாரை படி என்று தமிழ்நாட்டில் விஷத்தை விதைக்கும் திராவிட மாடல் அரசு, நீ படித்தது பெரியார் காரணம், நீ வேலையில் இருப்பது பெரியார் காரணம் என்று திமுககார பாவம் அவன் வீட்டு குழந்தைகளை பாதிக்கும். ஒழிய போகும் திமுக. பெற்ற மகளை நாசம் செய்ய துடிக்கும் எண்ணம் கொண்டவர்கள்..
மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தானில் ஒரு ஆண் தனது மகளிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிப்பதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில் அந்தப் பெண் பயத்துடன் ஓடிச்சென்று மற்றொரு பெண்ணிடம் செல்வது போலவும், அந்த ஆண் துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை நோக்கி சுட வருவது போலவும் காட்சிப் பதிவாகி உள்ளது.
🚨Bulle😱🤔
Viral video from Pakistan, think how can a father do such cruelty to his own daughter?News published in Pakistani newspaper in which it is clearly written about the brutality of the father who wanted to rape his daughter. pic.twitter.com/IB4D5arhDe
— Nagma Khatun🇮🇳 (@Nagmakhatun786) September 13, 2023
-Sanatan is regressive
-Sanatan is anti women
-Sanatan needs to be eradicatedAnd what about this? Is it progressive & pro women?
Rap!ng own daughter is feminism?@khanumarfa @_sabanaqvi
https://t.co/A3Dsj2eHG8— Mr Sinha (@MrSinha_) September 12, 2023
உண்மை என்ன ?
பாகிஸ்தானில் தந்தை தனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு செய்தித்தாள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்ததால், அந்த செய்தித்தாளின் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். அப்படி தேடியதில் எந்த ஊடகத்திலும் இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. எனவே அந்த செய்தித்தாளின் வலது பக்கத்தில் குறிப்பிட்டுள்ள செய்திகள் குறித்து தேடினோம்.
‘recital program‘ என்ற இணையதளத்தில் அதே உள்ளடக்கத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டோம். இந்த செய்தி, டிசம்பர் 11, 2016 அன்று நியூயார்க் டைம்ஸ் என்ற செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2014-இல் வெளியிடப்பட்ட இந்த செய்தியின் முழு பகுதியையும் தேடி கண்டறிய முடிந்தது. இரண்டிலும் பரவி வரும் செய்தித்தாளின் பகுதி இடம்பெறவில்லை.
Scribd இணையதளத்திலும் இதே கட்டுரையைக் காண முடிந்தது. ஆனால் இதிலும் பரவி வரும் செய்திகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே வைரலான செய்தித்தாள் போலியானது என்பதயும், செய்தித்தாள் உருவாக்கும் இணையங்களைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிய முடிந்தது.
மேலும் தேடியதில், அதே வீடியோவைக் கொண்ட எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தின் பதிவைக் கண்டோம். அதில், “குடும்பத் தகராறில், கணவர் தனது மனைவியைக் கலாஷ்னிகோவ் (Kalashnikov) என்று சொல்லப்படுகின்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி கொல்ல முயன்றார். உறவினர்கள் அப்பெண்ணை காப்பாற்றினர். குர்ரம் ஷபீர் தனது மகளை தாக்குவதையும் அதில் காணலாம்.” என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேடியதில், லாகூர் போலீஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், தெற்கு காவல் நிலைய எண். 3426/23 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மேலதிக விசாரணை லாகூர் புலனாய்வு காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் என்று பதிவிட்டு உள்ளனர்.
டுகி நியூஸ் என்ற ஃபேஸ்புக் பக்கமும் இதே வீடியோவை குடும்ப வன்முறை என்றுக் குறிப்பிட்டே செய்தி வெளியிட்டுள்ளது. தலைப்பை தமிழில் மொழிபெயர்ப்பு செய்கையில், “கணவன் தனது மனைவியை கலாஷ்னிகோவைப் பயன்படுத்தி கொல்ல முயன்றான். அவரது மனைவியை உறவினர்கள் காப்பாற்றினர். இருந்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐஜி பஞ்சாப் இதுகுறித்து முழு கவனத்தையும் எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, பாகிஸ்தான் இணையதளமான எக்ஸ்பிரஸ் மற்றும் ஆஜ்.டிவி போன்ற இணையதளங்களிலும் இதுகுறித்த செய்தி அறிக்கைகளைக் கண்டோம் . அதில், “லாகூரில் குராம் ஷபீர் என்ற நபர் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தனது மனைவியைக் கொல்ல கலாஷ்னிகோவை பயன்படுத்தியுள்ளார். மற்ற உறவினர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவரது மனைவியை மீட்டனர். அந்த பெண் தனது கணவர் மீது புகார் அளித்ததை அடுத்து, லாகூரில் உள்ள தெற்கு கண்டோன்மென்ட் பகுதியில் போலீசார் அவரை கைது செய்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்ததாகப் பரவும் வதந்தி !
இதற்கு முன்பும் இதே போன்று பாகிஸ்தான் குறித்து பரப்பப்பட்ட தவறான செய்திகளையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தனது மகளை பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாகக் கூறி பரவி வரும் வீடியோ தவறானவை. சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ, குடும்பப் பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.